/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
மருத்துவ கட்டமைப்பு தொடர்ந்து மேம்படுத்தப்படுகிறது அமைச்சர் சுப்பிரமணியன் பேச்சு
/
மருத்துவ கட்டமைப்பு தொடர்ந்து மேம்படுத்தப்படுகிறது அமைச்சர் சுப்பிரமணியன் பேச்சு
மருத்துவ கட்டமைப்பு தொடர்ந்து மேம்படுத்தப்படுகிறது அமைச்சர் சுப்பிரமணியன் பேச்சு
மருத்துவ கட்டமைப்பு தொடர்ந்து மேம்படுத்தப்படுகிறது அமைச்சர் சுப்பிரமணியன் பேச்சு
ADDED : மே 16, 2025 01:45 AM
ஏற்காடு, சேலம் மாவட்டம் ஏற்காட்டில், தேசிய சுகாதார இயக்கத்தின், இரு நாள் மாநில கருத்தரங்கு, நேற்று நடந்தது. மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சுப்பிரமணியன், சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன் தொடங்கி வைத்தனர். தொடர்ந்து சேலம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையின் முதல்கட்ட செயற்கை கருத்தரிப்பு மையம், மனநல அவசர சிகிச்சை மீள் மையம், ஹீமோபிலியா செயலி ஆகியவற்றை தொடங்கி வைத்தனர்.
இதையடுத்து அமைச்சர் சுப்பிரமணியன் பேசியதாவது: மக்கள் நல்வாழ்வு துறையை பொறுத்தவரை, 4 ஆண்டுகளில் மருத்துவ சேவை பல்வேறு திட்டங்கள் மூலம் மேம்படுத்தப்பட்டு, லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள், அரசு மருத்துவ சேவையை பயன்படுத்த தொடங்கியுள்ளனர். இந்த அரசு பொறுப்பேற்கும் முன், 6 லட்சம் பேர் வரை, மருத்துவ சேவையை பயன்படுத்தினர். இன்று தினமும், 10 லட்சம் பேர் வரை பயன்படுத்த தொடங்கி உள்ளனர். தனியார் மருத்துவ சேவைகளில் இருந்து விடுபட்டு அரசு மருத்துவ சேவை மீது நம்பிக்கை வைத்து மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். இத்தகைய மக்களுக்கு சிறந்த மருத்துவ சேவையை வழங்க, முதல்வர் அறிவுறுத்தல்படி ஏற்ப, மருத்துவ கட்டமைப்பு தொடர்ந்து மேம்படுத்தப்பட்டு வருகிறது. 1,018 கோடி ரூபாய் செலவில், மாவட்ட தலைமை மருத்துவமனை தரம் உயர்த்தும் பணிகள், 50 புதிய ஊரக மற்றும் நகர்புற ஆரம்ப சுகாதார நிலைய பணிகள், 208 நகர்புற நலவாழ்வு மைய பணிகள் ஆகியவை முடியும் நிலையில் உள்ளன.
இவ்வாறு அவர் பேசினார்.
அமைச்சர் ராஜேந்திரன் பேசுகையில், ''சென்னைக்கு அடுத்து சேலம் அரசு மருத்துவமனையில், செயற்கை கருத்தரிப்பு மையம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. அர்ப்பணிப்பு உணர்வோடு பணியாற்றும் மருத்துவ துறையின் அனைத்து நிலை அலுவலர்களுக்கும் வாழ்த்துகள்,'' என்றார்.
மக்கள் நல்வாழ்வுத்துறை முதன்மை செயலர் செந்தில்குமார், சேலம் கலெக்டர் பிருந்தாதேவி, தேசிய நல வாழ்வு குழும இயக்குனர் அருண் தம்புராஜ், எம்.பி.,க்களான, சேலம் செல்வகணபதி, கள்ளக்குறிச்சி மலையரசன், மருத்துவ கல்வி, ஆராய்ச்சியக இயக்குனர் சங்குமணி, மருத்துவம், ஊரக நலப்பணி இயக்குனர் ராஜமூர்த்தி, பொது சுகாதாரம், நோய் தடுப்பு மருந்து துறை இயக்குனர் செல்வ விநாயகம் உள்ளிட்ட மருத்துவ துறையினர் பங்கேற்றனர்.
'மெட் லீட் - -2025'
''மருத்துவ துறையின் பல்வேறு திட்டங்கள், முன்னெடுப்புகள், செயற்கை கருத்தரிப்பு, அவசர சிகிச்சை, புற்றுநோய் சிகிச்சை, தலைமைப்பண்பு வளர்த்தல் உள்பட பல்வேறு தளங்களில் பயிற்சி அளிக்க கூடிய, 'மெட் லீட் - -2025' கருத்தரங்கம் தொடங்கி வைக்கப்பட்டது. முதல் நிகழ்வாக மாவட்ட சுகாதார அலுவலர்கள், இணை இயக்குனர்கள், கல்லுாரி முதல்வர்கள், துறைத்தலைவர்கள் என, 178 பேர் அழைக்கப்பட்டுள்ளனர்,'' என, அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்தார்.
மலைக்கிராமத்தில்
வீடுகள் தோறும் ஆய்வு
அமைச்சர் சுப்பிரமணியன், நேற்று முன்தினம் ஏற்காடு வந்து ஆய்வு மாளிகையில் தங்கினார். தொடர்ந்து நேற்று காலை, வாழவந்தி வழியே மதுார் மலைக்கிராமம் வரை, 16 கி.மீ., நடைபயிற்சி மேற்கொண்டார்.
அப்போது வீடுகள் தோறும் சென்று, 'மக்களை தேடி மருத்துவ குழுவினர் வருகின்றனரா; சரியான முறையில் சிகிச்சை அளிக்கின்றனரா' என, கேட்டறிந்தார். அதேபோல் அரசு அதிகாரிகளிடம், 'இந்த கிராமத்தில் எத்தனை பேருக்கு சர்க்கரை உள்ளிட்ட வியாதிகள் உள்ளன; எத்தனை நோயாளிகள் மக்களை தேடி மருத்துவம் மூலம் சிகிச்சை பெற்று வருகின்றனர்' என கேட்டறிந்தார். மாவட்ட சுகாதார அலுவலர் யோகநாத், வட்டார மருத்துவ அலுவலர் தாம்சன், தி.மு.க., ஒன்றிய செயலர் ராஜேந்திரன் உள்ளிட்ட கட்சியினர் உடனிருந்தனர்.