/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
சேலத்தில் எம்.சாண்ட் விலை 7 நாளில் குறைப்பு
/
சேலத்தில் எம்.சாண்ட் விலை 7 நாளில் குறைப்பு
ADDED : ஏப் 29, 2025 02:07 AM
பனமரத்துப்பட்டி:
சேலம் மாவட்டத்தில், கல்குவாரி கிரஷர் உரிமையாளர்கள் சங்கம் சார்பில், 24 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, 70 கிரஷர்கள், 30 கல்குவாரிகள் கடந்த, 16 முதல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். கிரஷர் உரிமையாளர் சங்கத்தினருடன், அரசு பேச்சுவார்த்தை நடத்தியதால், புதியதாக விதிக்கப்பட்ட கனிம நிலவரியை நீக்க அரசு சம்மதிக்கவில்லை. எம்.சாண்ட் விலையை உயர்த்திக் கொள்ள முடிவு செய்யப்பட்டது.
கிரஷர் உரிமையாளர்கள் போராட்டத்தை கைவிட்டு, கடந்த 21ல், வழக்கம் போல் கிரஷர்களை இயக்கினர். எம்.சாண்ட், பி.சாண்ட் மற்றும் ஜல்லிகள் விலையை கிரஷர் உரிமையாளர்கள் உயர்த்தினர். அதன்படி, ஒரு யூனிட் எம்.சாண்ட் 5,000த்திலிருந்து, 6,000 ரூபாய், பி.சாண்ட் 6,000த்திலிருந்து 7,000 ரூபாய்க்கு விலை உயர்த்தினர். அனைத்து வகை ஜல்லிகள் ஒரு யூனிட், 4,000 ரூபாயில் இருந்து, 5,000 ரூபாய்க்கு உயர்ந்தது. விலை உயர்த்தப்பட்ட ஒரே வாரத்தில் நேற்று எம்.சாண்ட், பி.சாண்ட் மற்றும் ஜல்லி விலை தலா, 1,000 ரூபாய் குறைக்கப்பட்டது. இது குறித்து, சேலம் மாவட்ட கிரஷர் உரிமையாளர் நலச்சங்க செயலாளர் ராஜா கூறியதாவது:
அரசுடன் நடந்த பேச்சுவார்த்தையில், அரசுக்கு செலுத்தும் ராயல்டி தொகையில் டன் ஒன்றுக்கு, 60 ரூபாயில் இருந்து, 33 ரூபாயாக குறைத்துள்ளனர். கனிம நிலவரியை நீக்கும்படி கோரிக்கை வைத்தோம். அதை உடனடியாக நீக்கி நடைமுறைப்படுத்த முடியாது என தெரிவித்தனர். கல்குவாரி ஒப்பந்தம் எடுப்பதை எளிமையாக்க வேண்டும். குவாரியில் இருந்து, 300 மீட்டர், கிரஷரில் இருந்து, 500 மீட்டர் சுற்றளவில் கட்டடம் கட்ட அனுமதி வழங்கக் கூடாது. சமூக ஆர்வலர் என்ற பெயரில், தொழில் செய்வதற்கு தொல்லை கொடுக்கின்றனர் என, அரசிடம் தெரிவித்தோம். இந்த கோரிக்கையை பரிசீலனை செய்வதாக தெரிவித்துள்ளனர்.
அரசு கேட்டுகொண்டபடி, மக்கள் நலன் கருதி எம்.சாண்ட், பி.சாண்ட் மற்றும் ஜல்லிகள் விலை தலா, 1,000 ரூபாய் குறைத்து கொண்டோம். அதன்படி, ஒரு யூனிட் எம்.சாண்ட், 5,000, பி.சாண்ட் 6,000, அனைத்து ஜல்லிகள், 4,000 ரூபாய்க்கு நேற்று முதல் விற்பனை செய்யப்படுகிறது. மிகவும் சிரமத்திற்கு மத்தியில் தொழில் செய்ய வேண்டிய நிலை உள்ளது.
இவ்வாறு கூறினார்.