/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
குப்பை வரி வசூலிக்காவிட்டால் மத்திய அரசு நிதி தராது நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் நேரு தகவல்
/
குப்பை வரி வசூலிக்காவிட்டால் மத்திய அரசு நிதி தராது நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் நேரு தகவல்
குப்பை வரி வசூலிக்காவிட்டால் மத்திய அரசு நிதி தராது நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் நேரு தகவல்
குப்பை வரி வசூலிக்காவிட்டால் மத்திய அரசு நிதி தராது நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் நேரு தகவல்
ADDED : டிச 22, 2024 12:55 AM
ஓசூர், டிச. 22-
''குப்பை வரியை வசூல் செய்யா விட்டால், மத்திய அரசு நிதி தராது,'' என, அமைச்சர் நேரு கூறினார்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் மாநகராட்சியின், 20 வார்டுகளில் முழுமையாகவும், 10 ல் ஒரு பகுதியும் என, 582.54 கோடி ரூபாய் மதிப்பில், முதற்கட்ட பாதாள சாக்கடை திட்ட துவக்க விழா ஓசூர் ராமநாயக்கன் ஏரிக்கரையில் நேற்று நடந்தது.
அமைச்சர் சக்கரபாணி, மாவட்ட கலெக்டர் சரயு தலைமை வகித்தனர். மேயர் சத்யா வரவேற்றார். தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் பிரகாஷ், மதியழகன், இ.கம்யூ., - எம்.எல்.ஏ., ராமச்சந்திரன், காங்., - எம்.பி., கோபிநாத் முன்னிலை வகித்தனர். திட்டத்தை துவக்கி வைத்து, அமைச்சர் நேரு பேசியதாவது:
ஓசூர் மாநகராட்சிக்கு, ஓசூர் முழுவதும் மேலும், 300 கோடி ரூபாயில் பாதாள சாக்கடை திட்டம் கொண்டு வரப்படும். தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில், ஓசூர் மாநகராட்சி, கிருஷ்ணகிரி, தர்மபுரி நகராட்சிகள், 16 டவுன் பஞ்.,க்கள், 20 ஒன்றியங்களில் மக்கள் பயனடையும் வகையில், 7,955.37 கோடி ரூபாய் மதிப்பில், ஒகேனக்கல், 2ம் கட்ட திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதன் மூலம் மொத்தம், 50.53 லட்சம் மக்கள் பயனடைவர்.
தினமும், 305 எம்.எல்.டி., தண்ணீர் பெற திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. 7,955.37 கோடி ரூபாயில், ஜல்ஜீவன் திட்டத்தில் மத்திய அரசு, 2,283.41 கோடி ரூபாயை பங்களிப்பு தொகையாக வழங்க உள்ளது. தமிழக அரசின் பங்களிப்பு தொகைக்கு, ஜப்பான் ஜைக்கா நிறுவனத்திடம் கடன் கேட்டுள்ளோம். ஜூன், 25ம் தேதிக்குள் தருவதாக ஒப்புக் கொண்டுள்ளனர்.
ஓசூர் மாநகராட்சியில், 'துாய்மை இந்தியா' திட்டத்தில் கடந்த, 2017 ல், அ.தி.மு.க., ஆட்சியில் வீடுகளுக்கு மாதம், 30 ரூபாய், மற்ற கட்டடங்களுக்கு, 300 ரூபாய் குப்பை வரி போட்டுள்ளனர். அதை, 7 ஆண்டு களாக வசூல் செய்யாததால், 118 கோடி ரூபாய் பாக்கி உள்ளது. மத்தளத்திற்கு, 2 பக்கமும் அடி என்பது போல், மக்களான நீங்களும் பணம் தரவில்லை. வசூல் செய்யா விட்டால், மத்திய அரசும் நிதி தர முடியாது என கூறுகிறது.
எனவே, குப்பை வரியை மொத்தமாக வசூல் செய்யாமல், பகுதி, பகுதியாக வசூல் செய்யலாம். தள்ளுபடி கோரிக்கையால், 2022 ஏப்., 1ம் தேதி முதல் கணக்கிட்டு, குப்பை வரியை வசூலிக்கிறோம். 2017 முதல், 2022 மார்ச் வரை, 5 ஆண்டு காலத்திற்கு வரி தள்ளுபடிக்கு, முதல்வரிடம் அனுமதி பெற நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு, அவர் பேசினார்.
தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய மேலாண்மை இயக்குனர் தட்சிணாமூர்த்தி, நகராட்சி நிர்வாக இயக்குனர் சிவராசு, ஓசூர் மாநகராட்சி கமிஷனர் ஸ்ரீகாந்த், துணை மேயர் ஆனந்தய்யா, பொது சுகாதார குழு தலைவர் மாதேஸ்வரன், முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் செங்குட்டுவன், முருகன் உட்பட பலர் பங்கேற்றனர்.
நிதி ஒதுக்கீடு
பாதாள சாக்கடை திட்டத்திற்கு மத்திய அரசு, 170.56 கோடி ரூபாய், தமிழக அரசு, 155.06 கோடி ரூபாய், ஓசூர் மாநகராட்சி, 256.92 கோடி ரூபாய் வழங்கியுள்ளன. மாநகராட்சியில் அவ்வளவு நிதி இல்லாததால், ஜெர்மன் நாட்டிடம் கடனுதவி பெற்றுள்ளது. ஓசூர் ராமநாயக்கன் ஏரி, சாந்தபுரம் ஏரி அருகே இரு இடங்களில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்கப்படுகிறது. இங்கு தினமும், 32.64 எம்.எல்.டி., கழிவுநீர் சுத்திகரிப்பு செய்யப்படும். பாதாள சாக்கடை பணிகள், 3 ஆண்டுகளில் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.