ADDED : ஜன 12, 2024 12:18 PM
இன்று முதல்
௪௦௦ சிறப்பு பஸ்கள்
இயக்கப்படும்
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சேலம் கோட்டத்தில் இன்று முதல் வரும், 18 வரை, 400 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் இருந்து சென்னை, பெங்களூரு, கோவை, மதுரை, திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட அனைத்து முக்கிய நகரங்களுக்கு பஸ்கள் கூடுதலாகவும், புறநகர் தடங்களில் கூடுதல் நடைகளும் இயக்கப்படுகின்றன.
அதேபோல் கூட்டத்துக்கேற்ப டவுன் பஸ்களும் இயக்கப்படும். அரசு விரைவு போக்குவரத்து முன்பதிவு மையம், www.tnstc.in என்ற இணையதளம் மூலம் முன்பதிவு செய்து கொள்ளலாம் என, கோட்ட மேலான் இயக்குனர் பொன்முடி தெரிவித்துள்ளார்.
'மாற்று கட்சியினர் மிரளும்படி மாநாடு அமைய வேண்டும்'
பெத்தநாயக்கன்பாளையத்தில் வரும், 21ல், தி.மு.க., இளைஞர் அணி மாநில மாநாடு நடக்க உள்ளது. இதற்கு அங்கு அமைக்கப்பட்டுள்ள அலுவலகத்தில் ஆலோசனைக்கூட்டம் நேற்று நடந்தது. அதில் நகர்புற வளர்ச்சித்துறை அமைச்சர் நேரு தலைமை வகித்து பேசுகையில், ''மாநாட்டுக்கு அதிகளவில் இளைஞர் அணி, கட்சியினரை அழைத்துவர வேண்டும். மாற்று கட்சியினர் மிரளும்படி மாநாடு அமைய வேண்டும்,'' என்றார்.
மாவட்ட செயலர்கள் சிவலிங்கம், செல்வகணபதி, எம்.எல்.ஏ., ராஜேந்திரன், மாவட்ட துணை செயலர்கள் சுரேஷ்குமார், சின்னதுரை, மாவட்ட நெசவாளர் அணி அமைப்பாளர் ஆறுமுகம், பெத்தநாயக்கன்பாளையம் ஒன்றிய, நகர நிர்வாகிகள் பங்கேற்றனர்.
6.20 லட்சம் பேருக்கு
பொங்கல் பரிசு வழங்கல்
சேலம் மாவட்டத்தில், 1,715 ரேஷன் கடைகளில் உள்ள, 10.70 லட்சம் அரிசி கார்டுதாரர்கள், இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும், 935 குடும்பங்களுக்கு, 118.85 கோடி ரூபாய் மதிப்பில் பொங்கல் பரிசுத்தொகுப்புகள், நேற்று முன்தினம் முதல் வழங்கப்பட்டு வருகின்றன. மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து, ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, முழு கரும்புடன், 1,000 ரூபாயை பெற்றுச்செல்கின்றனர். மேலும் பொங்கல் பரிசு தொகுப்புடன் வேட்டி, சேலை வழங்கும் நிகழ்வும் தொடங்கி வைக்கப்பட்டது. இரு நாட்களில், 6.20 லட்சம் கார்டுதாரர்கள் பொங்கல் பரிசு பெற்றுள்ளனர். இது, 58 சதவீதம்.
சி.ஐ.டி.யு., தொழிற்சங்க
மண்டல தலைவர் மீது வழக்கு
போக்குவரத்து தொழிலாளர்கள், 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, கடந்த, 9ல் வேலை நிறுத்த போராட்டத்தை தொடங்கினர். இதில் நேற்று முன்தினம், சி.ஐ.டி.யு., தொழிற்சங்கத்தின் சேலம் மண்டல தலைவர் செம்பான், 54, தலைமையில், 122 பேர், மெய்யனுார் பணிமனை முன் சாலை மறியலுக்கு முயன்றனர். போலீசார் பேச்சு நடத்தி கலைந்து போகச்செய்தனர். ஆனால் மெய்யனுார் வி.ஏ.ஓ., கண்ணன் புகார்படி, பள்ளப்பட்டி போலீசார் செம்பன் உள்பட, 122 பேர் மீது அனுமதி இன்றி கூடுதல், போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தல் பிரிவுகளில் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.
குடிநீர் வினியோகம் இல்லை
பெண்கள் சாலை மறியல்
சேலம், சித்தர்கோவில் அருகே முருங்கப்பட்டி ஊராட்சி பூமுட்டையான் தெரு, சிவசக்தி நகரில், 100க்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். அங்கு, 10 நாட்களுக்கு மேலாக குடிநீர் வினியோகிக்கப்படாமல் மக்கள் அவதிப்பட்டனர்.
இதை கண்டித்து அப்பகுதி பெண்கள் நேற்று மாலை காலிக்குடங்களுடன் இளம்பிள்ளை - சேலம் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இரும்பாலை போலீசார், பேச்சு நடத்தி குடிநீர் சீராக வினியோகிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என, உறுதி அளித்தனர். இதனால் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.
இச்சம்பவத்தால், அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.