sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 29, 2025 ,ஐப்பசி 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

செய்திகள் சில வரிகளில்... சேலம்

/

செய்திகள் சில வரிகளில்... சேலம்

செய்திகள் சில வரிகளில்... சேலம்

செய்திகள் சில வரிகளில்... சேலம்


ADDED : ஜன 21, 2024 12:09 PM

Google News

ADDED : ஜன 21, 2024 12:09 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஜருகுமலை பள்ளி கட்டடம்

அமைச்சர் திறக்க திட்டம்

பனமரத்துப்பட்டி, குரால்நத்தம் ஊராட்சியில் ஜருகுமலை உள்ளது. அங்குள்ள இரு கிராமங்களில், 1,200க்கும் மேற்பட்ட மலைவாழ் மக்கள் வசிக்கின்றனர்.

அங்கு சிமென்ட் அட்டை வேயப்பட்ட பழைய கட்டடத்தின் ஒரு அறையில் அரசு நடுநிலைப்பள்ளி செயல்பட்டது. ஜருகுமலையில், அமைச்சர் உதயநிதி நடித்த, 'மாமன்னன்' படம் எடுக்கப்பட்டது. அப்போது அங்கு வந்த உதயநிதியிடம், அரசு பள்ளிக்கு மாடி கட்டடம் கட்டித்தர, மலைவாழ் மக்கள் கோரிக்கை விடுத்தனர்.

இதையடுத்து, 'நமக்கு நாமே' திட்டத்தில், 49.50 லட்சம் ரூபாய், ஒன்றிய பொது நிதி, 18 லட்சம் என, 67.50 லட்சம் ரூபாயில், அரசு நடுநிலைப்பள்ளிக்கு, 4 அறைகள் கொண்ட மாடி கட்டடம் கட்டப்பட்டு, வண்ணம் தீட்டி தயார் நிலையில் உள்ளது.

இந்நிலையில் சேலத்தில், தி.மு.க., இளைஞரணி மாநாடு நாளை நடக்க உள்ளது. அதில் பங்கேற்க வரும் அமைச்சர் உதயநிதி, ஜருகுமலையில் கட்டப்பட்ட அரசு பள்ளி கட்டடத்தை, இன்று அல்லது நாளை திறந்து வைக்க வாய்ப்புள்ளதாகவும், தி.மு.க.,வினர் இல்லாமல் மக்களுடன் இணைந்து, பள்ளி கட்டட திறப்பு விழாவை நடத்த திட்டமிட்டுள்ளதாகவும், அதிகாரிகள் தரப்பில் தெரிவித்தனர்.

2 லட்சம் பேருக்கு உணவு

தயார் செய்யும் பணி தீவிரம்

சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையத்தில், தி.மு.க., இளைஞர் அணி மாநில மாநாடு இன்று நடக்கிறது.

இதில் பங்கேற்கும் கட்சியினர், 2 லட்சம் பேருக்கு உணவு தயார் செய்யும் பணி நடந்து வருகிறது.

குறிப்பாக, மட்டன் பிரியாணி, சிக்கன் 65, கட்டன் பைங்கான்(புளி கத்தரிக்காய்), பிரட் அல்வா, தயிர் சாதம் என, அசைவ உணவாக, 1.70 லட்சம் பேருக்கும், வெஜிடபிள் பிரியாணி, கோபி 65, தயிர் சாதம், பிரட் அல்வா, கட்டன் பைங்கான் என, சைவ உணவாக, 30,000 பேருக்கும் வழங்கப்படுகிறது.

வி.ஐ.பி.,க்களுக்கு என்ன?

காலையில், கருப்பட்டி கேசரி, சிவப்பு அரிசி இட்லி, வடை, இடியாப்பம், முடக்கத்தான் தோசை, பொங்கல், பூரி, சாம்பார், தேங்காய் சட்னி, மல்லி சட்னி, கடலைக்கறி, பூரி மசாலா என, காலை டிபன் வழங்கப்படுகிறது.

மதியம், அக்கார வடிசல், சப்பாத்தி, கடாய் வெஜ், பன்னீர் பிரியாணி, பேபிகான் 65, கதம்ப சாம்பார், தக்காளி ரசம், உருண்டை மோர் குழம்பு, கேரட், பீன்ஸ் பொரியல், முட்டைக்கோஸ் அவியல், வாழைப்பூ வடை, அடைப்பிரதமன், அப்பளம், மோர் மிளகாய், ஊறுகாய், வாழைக்காய் சிப்ஸ், வாழைப்பழம், பீடா, ஐஸ்கிரீம் வழங்கப்படுகின்றன.

பயிர் சாகுபடி குறித்து

செயல் விளக்க பயிற்சி

வேளாண் துறை மேச்சேரி வட்டாரம் சார்பில் தேசிய வேளாண் வளர்ச்சி திட்டம், உணவு பாதுகாப்பு, ஊட்டச்சத்து இயக்கம், உணவு எண்ணெய் இயக்கம் திட்டத்தில், செயல் விளக்க பயிற்சி நேற்று நடந்தது. இதில் ஓலைப்பட்டி, அரங்கனுார், பெரியசாத்தப்பாடி, கொப்பம்பட்டி உள்ளிட்ட கிராமங்களில் ராகி, கம்பு, தட்டைப்பயிறு, துவரை பயிரிட்டுள்ள செயல் விளக்க திடலை, மாவட்ட வேளாண் இணை இயக்குனர் சிங்காரம் பார்வையிட்டார். அப்போது விவசாயிகளுக்கு, சாகுபடி குறித்த சந்தேகங்களுக்கு விளக்கம் அளித்தார்.

மேலும் திட்ட பணிகளை விரைந்து முடிக்க, வேளாண் அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். வட்டார வேளாண் உதவி இயக்குனர் ெஷரீன், வேளாண் அலுவலர் பாலு மகேந்திரன் உள்ளிட்ட அலுவலர்கள் பங்கேற்றனர்.

பெண் கொலை?

சேலம், நகரமலை அடிவாரம், திடீர் நகர் அருகே வழுக்குப்பாறை பள்ளத்தில், 45 வயது மதிக்கத்தக்க பெண், 50 மீ., ஆழ பள்ளத்தில் இறந்து கிடந்தார். இதுகுறித்து அழகாபுரம் போலீசாருக்கு நேற்று இரவு தகவல் கிடைத்தது. அங்கு சென்று போலீசார் பார்வையிட்டனர். இரவு நேரம் என்பதால், உடலை உடனே மீட்க முடியவில்லை. அதேநேரம், பள்ளத்தில் விழுந்து தற்கொலை செய்து கொண்டாரா, யாரேனும் கொலை செய்து உடலை வீசிச்சென்றனரா என, போலீசார் விசாரிக்கின்றனர்.

உருக்காலை தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

'செயில்' பொதுத்துறை நிறுவனத்தின், சேலம் உருக்காலையில் பணிபுரியும் தொழிலாளர்கள் மற்றும் ஒப்பந்த தொழிலாளர்களின் ஊதிய உயர்வு ஒப்பந்தந்தை இறுதி செய்தல்; 39 மாத நிலுவை தொகையை வழங்குதல்; பல்வேறு, 'அலவன்ஸ்'களை மாற்றி அமைத்தல் என்பன உள்பட, 14 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, உருக்காலை தொழிற்சங்கங்கள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதே கோரிக்கைகளை வலியுறுத்தி, நேற்று முன்தினம், 'செயில்' நிறுவனத்தின் அனைத்து உருக்காலைகளிலும், தொழிலாளர்கள், கோரிக்கை அட்டை அணிந்து பணியாற்றினர். நேற்று, அனைத்து உருக்காலைகளிலும் ஆர்ப்பாட்டம் நடந்தது.

அதன்படி சேலத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்தில், 100க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பங்கேற்றனர்.

தீப்பிடித்து ஆம்னி வேன் நாசம்

சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே கோவிந்தம்பாளையம் ஊராட்சி கம்பளிமேட்டை சேர்ந்தவர் முத்துவேல், 40. காய்கறி வியாபாரியான இவர் நேற்று, தலைவாசல் தினசரி மார்க்கெட்டுக்கு ஆம்னி வேனில் சென்றுவிட்டு, காலை, 10:00 மணிக்கு, தலைவாசல் - ஆறகளூர் சாலையில் திரும்பி வந்து கொண்டிருந்தார். மும்முடி விநாயகர் கோவில் அருகே வந்தபோது, 'காஸ்' கசிவால், வேன் தீப்பிடித்து எரியத்தொடங்கியது. உடனே முத்துவேல், வேனை நிறுத்திவிட்டு இறங்கினார். 10:30 மணிக்கு, ஆத்துார் தீயணைப்பு நிலைய அலுவலர் அசோகன் தலைமையில் வீரர்கள், தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் வேன் முழுதும் எரிந்து நாசமானது. தலைவாசல் போலீசார் விசாரிக்கின்றனர்.

விபத்தில் மாணவர் பலி

மேட்டூர், நாட்டாமங்கலத்தை சேர்ந்த அப்புசாமி மகன் அரவிந்த், 24. சேலத்தில் உள்ள தனியார் கல்லுாரியில், மெக்கானிக்கல், 2ம் ஆண்டு படித்தார்.

நேற்று மதியம், 3:00 மணிக்கு, பூலாம்பட்டியில் இருந்து, 'யமஹா' பைக்கில், ஹெல்மெட் அணியாமல் வீட்டை நோக்கி சென்று கொண்டிருந்தார்.

ரெட்டியூர் அடுத்த மணக்காட்டில் வந்தபோது, மேட்டூரில் இருந்து பூலாம்பட்டி நோக்கி, காய்கறி ஏற்றிச்சென்ற லாரியும், பைக்கும் நேருக்கு நேர் மோதியது.

இதில் பைக் நொறுங்கியதோடு, படுகாயம் அடைந்து அரவிந்த் உயிரிழந்தார். மேட்டூர் போலீசார் விசாரிக்கின்றனர்.

வி.சி., பிரமுகர் உட்பட 5 பேர் மீது வழக்கு

வந்தவாசி அருகே, 'பாஸ்ட் புட்' கடையில் தகராறில் ஈடுபட்ட, வி.சி., பிரமுகர் உள்ளிட்ட, 5 பேர் மீது, போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த மீசநல்லுாரை சேர்ந்தவர், வி.சி., கட்சியின், தெள்ளார் மத்திய ஒன்றிய செயலாளர் ஞானபிரகாசம், 45; இவரது உறவினர் கலைவாணன், 42; இருவரும் நேற்று முன்தினம் இரவு, தெள்ளாரிலுள்ள, 'பாஸ்ட் புட்' கடைக்கு சாப்பிட சென்றனர். அங்கு உணவு தர தாமதமானதால், கடை ஊழியர் பாண்டியன், 21, மற்றும் அங்கிருந்தவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர், கைகலப்பாக மாறியது.

இது குறித்து இருதரப்பினரும், தனித்தனியாக தெள்ளார் போலீசில் புகார் செய்தனர். போலீசார் இரு தரப்பை சேர்ந்த, 5 பேர் மீது வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.

அரளி செடியை துளைக்கும் புழு

உதவி இயக்குனர் ஆலோசனை

பனமரத்துப்பட்டி வட்டாரத்தில், 3,000 ஏக்கரில் அரளி, மல்லி, நந்தியாவட்டம் நடவு செய்யப்பட்டுள்ளது. அதில், 2,500 ஏக்கரில் அரளி சாகுபடி செய்யப்பட்டுள்ளது. கிராம மக்கள், அரளி வர்த்தகத்தை சார்ந்தே உள்ளனர்.

அரளி செடிகளில், பூச்சி, நோய் தாக்குதல் குறைவாக காணப்படுவதால் விவசாயிகள் விரும்பி பயிரிடுகின்றனர். ஆனால் புதிதாக தண்டு, வேர் துளைப்பான், அரளி செடிகளை சேதப்படுத்தி வருகின்றன.

இதுகுறித்து பனமரத்துப்பட்டி தோட்டக்கலை உதவி இயக்குனர் குமரவேல் கூறியதாவது:

தண்டு, வேர் துளைப்பான் தாக்கிய செடி வாடி காய்ந்துவிடும். தண்டு, வேர் பகுதியில் புழுக்கள் காணப்படும். இதை கட்டுப்படுத்த, நோய் பாதித்த செடிகளை சேகரித்து அகற்றவேண்டும். ஒரு லிட்டர் நீரில் குளோரிபைரிபாஸ் 2 மில்லி கலந்து, வேர்கள், தண்டுகள் நனையும்படி ஊற்ற வேண்டும்.

உயிரியில் முறையில் கட்டுப்படுத்த, மெட்டாரைசியம் அனிசோபிலே அல்லது பெவேரியா பேசியானா, ஒரு லிட்டர் நீருக்கு, 5 மில்லி வீதம் கலந்து, வேர், தண்டு நனையும்படி ஊற்ற வேண்டும். இதன் புழுக்களை கட்டுப்படுத்தலாம். மேலும் விபரங்களுக்கு, 9600284443 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us