ADDED : பிப் 15, 2024 10:32 AM
டிரைவர் மர்மச்சாவு
கொளத்துார், லக்கம்பட்டி ஊராட்சி ஊர்நத்தத்தை சேர்ந்த, டிராக்டர் டிரைவர் பாரதி, 33. இவருக்கும் அருகே உள்ள குரும்பனுாரை சேர்ந்த சபீனா, 27, என்பவருக்கும், 4 ஆண்டுக்கு முன் திருமணமானது. குழந்தை இல்லை. ஊர்நத்தத்தில் வசித்த பாரதி நேற்று முன்தினம் காலை வேலைக்கு சென்றார். பின் வீடு திரும்பவில்லை. இந்நிலையில் நேற்று காலை, தார்க்காடு செம்மலை சிவிலிகரடு ஏரியில், பாரதி சடலமாக கிடந்தார். அருகே காலி மதுபாட்டில், விஷ பாட்டில், குளிர்பான பாட்டில் இருந்தன. இதனால் மதுவில் விஷம் கலந்து குடிந்து
இறந்தாரா என, கொளத்துார் போலீசார் விசாரிக்கின்றனர்.
நவக்கிரக சிலை பிரதிஷ்டை
ஆத்துார், விநாயகபுரம், வசிஷ்ட நதி தென் பகுதியில் உள்ள ஆத்துாரம்மன் கோவிலில் நவக்கிரக சிலை பிரதிஷ்டை விழா நேற்று நடந்தது. காலை, 8:00 மணிக்கு கணபதி ேஹாமம், வாஸ்துசாந்தி, பூர்ணாஹூதி, தீபாராதனை நடந்தது. 10:00 மணிக்கு நவக்கிரஹ சிலைகள் பிரதிஷ்டை செய்து பூஜை செய்யப்பட்டது. ஏராளமான பக்தர்கள் வழிபட்டனர். இன்று காலை, 10:30 மணிக்கு நவக்கிரக சிலைகளுக்கு கும்பாபிேஷகம், தீபாராதனை நடக்கிறது.
நாய் கடித்த மயில் மீட்பு
ஆத்துார், முட்டல் வனப்பகுதியில் மான், மயில், காட்டெருமை, காட்டுப்பன்றிகள் உள்ளன. அங்கிருந்து நேற்று காலை, 8:00 மணிக்கு ஆத்துார் அருகே கல்லாநத்தத்தில் இரை தேடி வந்த ஆண் மயிலை, தெரு நாய்கள் கடித்துள்ளன. மக்கள், நாய்களிடம் சிக்கிய மயிலை காயமடைந்த நிலையில் மீட்டனர். அவர்கள் தகவல்படி ஆத்துார் வனத்துறையினர், மயிலுக்கு கால்நடை மருந்தகத்தில் சிகிச்சை அளித்து, அலுவலகத்துக்கு துாக்கி சென்றனர்.
விபத்தில் தொழிலாளி பலி
ஆத்துார் அருகே வளையமாதேவி ஊராட்சி ராஜீவ் காந்தி நகரை சேர்ந்தவர் வெற்றிவேல், 40. கூலித்தொழிலாளியான இவர், நேற்று இரவு, 9:40 மணிக்கு காட்டுக்கோட்டையில் இருந்து வளையமாதேவிக்கு, 'ேஹாண்டா' ஸ்கூட்டி மொபட்டில் சென்றார். அம்மம்பாளையம், சமத்துவபுரம் பஸ் ஸ்டாப்புக்கு வந்தபோது, அடையாளம் தெரியாத வாகனம், மொபட் பின்புறம் மோதியது. இதில் துாக்கி வீசப்பட்ட வெற்றிவேல், சம்பவ இடத்தில் உயிரிழந்தார். ஆத்துார் ஊரக போலீசார், விபத்து ஏற்படுத்திய வாகனம் குறித்து விசாரிக்கின்றனர்.
ஓய்வு தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
சேலம், ராமகிருஷ்ணா சாலையில் உள்ள, கோட்ட தலைமை அலுவலகம் முன், ஓய்வு பெற்ற போக்குவரத்து தொழிலாளர் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது. மண்டல தலைவர் பழனிவேல் தலைமை வகித்தார்.
அதில் போக்குவரத்துக்கழகங்களில் பணியாற்றி ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு பஞ்சப்படியை உயர்த்தி வழங்க உச்ச, உயர்நீதிமன்றங்கள் உத்தரவிட்ட போதும், போக்குவரத்துக்கழக நிர்வாகங்கள் நிறைவேற்றாததை கண்டித்தும், 98 மாத பஞ்சப்படியை வழங்க கோரியும் கோஷம் எழுப்பினர்.
அத்துடன் பென்ஷனுக்கு பட்ஜெட்டில் நிதி ஒதுக்குதல்; பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தல்; ஓய்வு பெற்றவர்கள், இறந்தவர்களின் குடும்பத்துக்கு பணப்பலன்களை உடனே வழங்குதல்; போக்குவரத்துக்கழகங்களில் வாரிசு வேலைகளை உடனே நிரப்புதல் உள்ளிட்ட கோரிக்கைகளையும் வலியுறுத்தினர். மண்டல செயலர் அன்பழகன், மாநில செயற்குழு உறுப்பினர்கள் கிருஷ்ணன், ராஜேந்திரன், பொருளாளர் அழகேசன் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.
ஆப்ரேஷன்களை அதிகப்படுத்த
மருத்துவர்களுக்கு அறிவுறுத்தல்
மருத்துவ பணிகள் இயக்குனர் இளங்கோ மகேஸ்வரன், ஓமலுார் அரசு மருத்துவமனையில் நேற்று ஆய்வு செய்தார். அப்போது பிரசவ வார்டில், பிரசவ சிகிச்சை ஏன் குறைந்தது என கேள்வி எழுப்பினார்.
அதேபோல் பல்வேறு துறைகளில் ஆப்ரேஷன்கள் குறைந்துள்ளது குறித்து கேட்டார். அதற்கு மயக்கவில் மருத்துவர் இல்லாததே காரணம் என, மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இதனால் இடைப்பாடியில் உள்ள மயக்கவியல் மருத்துவரை, பணியில் ஈடுபடுத்த உத்தரவிட்டார். அத்துடன் அனைத்து துறைகளிலும் ஆப்ரேஷன்களை அதிகரிக்க, மருத்துவர்களுக்கு அறிவுறுத்தினார். சேலம் மாவட்ட மருத்துவ இணை இயக்குனர் வளர்மதி, நாமக்கல் மாவட்ட மருத்துவ இணை இயக்குனர் ராஜ்மோகன், ஓமலுார் அரசு மருத்துவமனை முதன்மை மருத்துவ அலுவலர் நாகபுஷ்பராணி உடனிருந்தனர்.
நாளை முதல் 4 நாட்களுக்கு
200 சிறப்பு பஸ்கள் இயக்கம்
வார இறுதி நாட்கள், முகூர்த்தத்தை முன்னிட்டு, நாளை முதல், 4 நாட்களுக்கு, 200 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன.
இதுகுறித்து சேலம் கோட்ட மேலாண் இயக்குனர் பொன்முடி அறிக்கை:
வார இறுதி நாட்களுக்கு சொந்த ஊர் செல்லும் பயணியர், முகூர்த்த நாட்களை முன்னிட்டு திருமணம் உள்ளிட்ட விசேஷங்களில் பங்கேற்க வசதியாக, பிப்., 16(நாளை) முதல், 19 வரை, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல் மாவட்டங்களில் இருந்து, 200 சிறப்பு பஸ்கள், தொழில் நகரங்களுக்கும், தென் மாவட்டங்களுக்கும் இயக்கப்படும்.
அதேபோல் மறுமார்க்கத்தில் சென்னை, மதுரை, பெங்களூரு, திருவண்ணாமலை, சிதம்பரம், திருச்சியில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்படும். பயணியர், அரசு விரைவு போக்குவரத்துக்கழக முன்பதிவு மையங்கள், www.tnstc.in என்ற இணையதளம், அதன் செயலி வழியே முன்பதிவு செய்து கொள்ளலாம்.
பசு, கன்று வளர்ப்பு
6 பேருக்கு பரிசு
கால்நடை பராமரிப்பு துறை, ஓமலுார் கோட்டம் சார்பில் கால்நடை சுகாதார விழிப்புணர்வு முகாம், கொளத்துார், சிங்கிரிப்பட்டி ஊராட்சி அய்யம்புதுாரில் நேற்று நடந்தது. அதில், 60 மாடுகள், 100க்கும் மேற்பட்ட ஆடுகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டன.
மேலும் சிறப்பாக பசுங்கன்றுகளை பராமரித்த அய்யம்புதுார் விவசாயிகள் பாப்பாத்தி, சம்பூரணம், கண்ணம்மாள், சிறப்பாக காளைகளை பராமரித்த அய்யம்புதுார் மயில்சாமி, மாதையன், ரஞ்சித் ஆகியோருக்கு சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டன.
சின்டெக்ஸ் தொட்டி
விழுந்து ஆசாரி பலி
சேலம், குமாரசாமிப்பட்டியை சேர்ந்த ஜவஹருக்கு, ஏற்காடு, செம்மநத்தத்தில், 3 ஏக்கர் தோட்டம் உள்ளது. அங்கு கொட்டகை அமைக்கும் பணி நடக்கிறது.
அங்கு, செம்மநத்தம், வள்ளுவர் நகரை சேர்ந்த வேலன், 45, ஆசாரி வேலைக்கு நேற்று வந்தார். மாலை, 4:00 மணிக்கு அவர் பணியில் ஈடுபட்டிருந்தபோது, அருகே இருந்த, 1,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட தண்ணீர் தொட்டி சாய்ந்து, அவர் மீது விழுந்தது. இதில் படுகாயம் அடைந்த அவரை, அருகில் இருந்தவர்கள் மீட்டு, ஆம்புலன்ஸ் மூலம் ஏற்காடு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
ஆனால் அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். ஏற்காடு போலீசார், சம்பவ இடத்தில் ஆய்வு செய்து விசாரிக்கின்றனர்.
சாலை வசதி கேட்டு
மா.கம்யூ., ஆர்ப்பாட்டம்
வாழப்பாடி, தேக்கல்பட்டி அருகே கருங்கல்பட்டியில் நேற்று, மா.கம்யூ., கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அதில், திருமனுாரில் இருந்து ஆயில்பட்டி வரை தார்ச்சாலை வசதி செய்து தர கோரிக்கை விடுத்தனர்.
காலை, 10:00 முதல் மதியம், 1:00 மணி வரை ஆர்ப்பாட்டம் நடந்தது. பின் வாழப்பாடி போலீசார், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பேச்சு நடத்தி, உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறியதால், ஆர்ப்பாட்டத்தை கைவிட்டனர்.
சாம்பல் புதனையொட்டி
தேவாலயங்களில் வழிபாடு
சாம்பல் புதனையொட்டி, சேலம், 4 ரோட்டில் உள்ள குழந்தை இயேசு தேவாலயத்தில் சிறப்பு திருப்பலி, மறை மாவட்ட ஆயர் அருள்செல்வன் ராயப்பன் தலைமையில் நேற்று நடந்தது. தொடர்ந்து அவர், கடந்தாண்டு குருத்தோலை பவனியின்போது எரிக்கப்பட்ட ஓலையில் இருந்து எடுத்த சாம்பலை, கிறிஸ்தவர்களின் நெற்றியில் பூசி ஆசீர்வதித்தார்.
அதேபோல் கோட்டை சி.எஸ்.ஐ., கிறிஸ்துநாதர் ஆலயத்தில், ஆயர் ஜவகர் வில்சன் ஆசிர் டேவிட் தலைமையில் பரிசுத்த நற்கருணை நடந்தது. இதில் திரளானோர் பங்கேற்றனர். மேலும் கோட்டை ஆலயம் லெக்லர், ஜான்சன்பேட்டை அந்தோணியார் உள்ளிட்ட தேவாலயங்களில் சிறப்பு திருப்பலி, நற்கருணை நடந்தது.
சுகப்பிரசவங்களை அதிகப்படுத்த அறிவுரை
சேலம் மாநகராட்சி, 3வது வார்டில் உள்ள ரெட்டியூர் நகர்புற ஆரம்ப சுகாதார மையத்தில் கலெக்டர் பிருந்தாதேவி நேற்று ஆய்வு செய்தார். அப்போது, அங்கு மாதத்துக்கு, 9 சுகப்பிரவசங்கள் வரை நடக்கும் நிலையில், அதன் எண்ணிக்கையை அதிகரிக்க, மருத்துவர்களிடம் அறிவுறுத்தினார். தொடர்ந்து ரெட்டியூர் ஆரம்ப சுகாதார மையத்துக்கு, 60 லட்சம் ரூபாய் மதிப்பில், 15வது நிதிக்குழு உதவியுடன் கட்டப்படும் கூடுதல் கட்டட பணிகளை, விரைவாக முடித்து, பயன்பாட்டுக்கு கொண்டுவர உத்தரவிட்டார். மேலும் மாநகராட்சி மணக்காடு துவக்கப்பள்ளியில், முதல்வர் காலை உணவு திட்டத்தில் தயார் செய்யப்பட்ட உணவை ருசித்து பார்த்தார். மாநகர நல அலுவலர் யோகானந்த், உதவி கமிஷனர் சிந்துஜா உள்பட பலர் உடனிருந்தனர்.
டவுன் பஞ்சாயத்துகள்
அதேபோல் கன்னங்குறிச்சி, கருப்பூர் டவுன் பஞ்சாயத்துகளில் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகளை கலெக்டர் பார்வையிட்டார். டவுன் பஞ்சாயத்துகள் உதவி இயக்குனர் கணேஷ்ராம், செயற்பொறியாளர் கணேசன் உள்பட பலர்
உடனிருந்தனர்.
அடுப்பில் 'தின்னர்' ஊற்றியதில்
தீப்பிடித்து மாணவி படுகாயம்
சேலம், அம்மாபேட்டை, பச்சப்பட்டி முதல் குறுக்குத்தெருவை சேர்ந்த, பெயின்டர் செல்வகுமார், 49. இவரது மகள் சங்கரி, 13. அதே பகுதியில் மாநகராட்சி மேல்நிலைப்பள்ளியில், 8ம் வகுப்பு படிக்கிறார். அவரது தாய் தனலட்சுமி, 42, மனநிலை பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளார். இதனால் மாணவி, நேற்று காலை, 11:30 மணிக்கு உணவு சமைக்க வீட்டில் விறகு அடுப்பை பற்ற வைத்தார். சரிவர எரியாததால் பெயின்டுக்கு பயன்படுத்தும் தின்னரை எடுத்து அடுப்பில் ஊற்றினார். அப்போது ஏற்பட்ட குபீர் தீ, மாணவியின் ஆடையை பற்றியது. இதில் பலத்த காயமடைந்த மாணவி, சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அம்மாபேட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.
பத்ரகாளியம்மன் கோவிலில்
21ல் மாசி பெருவிழா தொடக்கம்
மேச்சேரி பத்ரகாளியம்மன் கோவிலில் மாசி மக தேரோட்ட பெருவிழா, வரும், 21ல் தொடங்க உள்ளது. இதை முன்னிட்டு நேற்று மாலை, 4:00 மணிக்கு தேர் பொங்கல், சுவாமி புறப்பாடு நடந்தது. நாளை காலை, 8:00 மணிக்கு விநாயகர் பூஜை, ஆயக்கால் பூஜை நடக்க உள்ளது. 21 இரவு, 11:00 மணிக்கு சக்தி அழைத்தல், 22 அதிகாலை, 4:30 மணிக்கு கொடியேற்றம், 23 மாலை, 4:00 மணிக்கு சின்ன தேரோட்டம், 24 மாலை, 4:00 மணிக்கு பெரிய தேரோட்டம், 25 மதியம், 3:00 மணிக்கு பெரிய தேர் நிலையை அடைதல் நிகழ்ச்சி நடக்க உள்ளது. 26 இரவு, 10:00 மணிக்கு சத்தாபரணம், 28 காலை, 8:00 மணிக்கு கொடி இறக்கம், மஞ்சள் நீராட்டம் நிகழ்ச்சிகள் நடக்க உள்ளன. இதற்கான ஏற்பாடுகளை, தக்கார் இளையராஜா, செயல் அலுவலர் திருஞானசம்பந்தர், கோவில் ஊழியர்கள், மக்கள் செய்து வருகின்றனர்.
பொங்கல் வைபவம்
வாழப்பாடி, மேட்டுப்பட்டி சுங்கச்சாவடி அருகே செல்லியம்மன் நகரில் உள்ள செல்லியம்மன் கோவில் பொங்கல் திருவிழா நேற்று நடந்தது. அதிகாலை, 5:00 மணிக்கு சிறப்பு அபிஷேகம், 6:00 மணிக்கு பட்டாடை அணிவித்து நகை அலங்கார பூஜை நடந்தன. தொடர்ந்து கோவில் திடலில் ஏராளமானோர் பொங்கல் வைத்து வழிபட்டனர். காலை, 10:00 மணிக்கு கரகம், மாவிளக்கு எடுத்தல், மதியம் உச்சிகால பூஜை, தீபாராதனை, முன்னடியானுக்கு சிறப்பு பூஜை, கோழி, கிடா வெட்டுதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தன.

