/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
சங்ககிரி சாலை விபத்தில் ஆம்னி பஸ் எரிந்து நாசம் மொபட்டில் சென்றவர் பலி; 8 பேர் காயம்
/
சங்ககிரி சாலை விபத்தில் ஆம்னி பஸ் எரிந்து நாசம் மொபட்டில் சென்றவர் பலி; 8 பேர் காயம்
சங்ககிரி சாலை விபத்தில் ஆம்னி பஸ் எரிந்து நாசம் மொபட்டில் சென்றவர் பலி; 8 பேர் காயம்
சங்ககிரி சாலை விபத்தில் ஆம்னி பஸ் எரிந்து நாசம் மொபட்டில் சென்றவர் பலி; 8 பேர் காயம்
ADDED : நவ 09, 2024 10:55 PM

சங்ககிரி:சென்னையில் இருந்து கோவைக்கு, 44 பயணியருடன், 'கிருஷ்ணா' என்ற தனியார் ஆம்னி பஸ், நேற்று முன்தினம் இரவு புறப்பட்டது. டிரைவர் அசோக்குமார் ஓட்டினார். சேலத்தில் பயணியரை இறக்கிவிட்ட பின், 20க்கும் மேற்பட்டோருடன் பஸ் கோவைக்கு சென்று கொண்டிருந்தது.
நேற்று காலை, 6:30 மணிக்கு சங்ககிரி அருகே கலியனுாரில் பஸ் சென்று கொண்டிருந்த போது, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து, சாலையோரம் சென்று கொண்டிருந்த, டி.வி.எஸ்., - எக்ஸ்.எல்., மொபட் மீது மோதியது.
டிரைவர், பஸ்சை சாலைக்கு திருப்ப முயன்றார். ஆனால், பஸ் ஒருபுறம் சாய்ந்து விபத்துக்குள்ளானது. உடனே அதில் இருந்த பயணியர், ஜன்னல் வழியே குதித்து வெளியேறினர். இருப்பினும், பஸ் தீப்பற்றி எரிய தொடங்கியது.
சங்ககிரி தீயணைப்புத்துறை வீரர்கள் தீயை அணைக்க முயன்றனர். தொடர்ந்து சங்ககிரி லாரி உரிமையாளர் சங்க தீயணைப்பு வாகனமும் வரவழைக்கப்பட்டு, தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.
ஆனால், பஸ் மோதியதில் மொபட்டில் சென்ற சங்ககிரி, சின்னாகவுண்டனுார், வீரபாண்டி நகரை சேர்ந்த பெரியசாமி, 60, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். சங்ககிரி டி.எஸ்.பி., ராஜா தலைமையில் போலீசார், கோவை - சேலம் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்தை மாற்றுப்பாதையில் திருப்பிவிட்டனர். சேலம் எஸ்.பி., கவுதம்கோயல் ஆய்வு செய்தார். சங்ககிரி போலீசார் விசாரிக்கின்றனர்.
தீப்பற்றியதில் பஸ் முற்றிலும் எரிந்துவிட்டது. பஸ்சில் பயணித்தவர்களின் மடிக்கணினிகள், மொபைல் போன்கள் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் நாசமாகின. இதில், கோவை, சிங்காநல்லுாரை சேர்ந்த ஜெபின், 33, உட்பட 8 பயணியர் படுகாயமடைந்து சங்ககிரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பஸ் டிரைவர், அதே வழியில் சென்ற வேறு ஒரு பஸ்சில் ஏறி தப்பியுள்ளார். அவரை போலீசார் தேடி வருகின்றனர்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.