/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
தீபாவளியை முன்னிட்டு புத்தாடை உடுத்தி பட்டாசு வெடித்து மக்கள் கொண்டாட்டம்
/
தீபாவளியை முன்னிட்டு புத்தாடை உடுத்தி பட்டாசு வெடித்து மக்கள் கொண்டாட்டம்
தீபாவளியை முன்னிட்டு புத்தாடை உடுத்தி பட்டாசு வெடித்து மக்கள் கொண்டாட்டம்
தீபாவளியை முன்னிட்டு புத்தாடை உடுத்தி பட்டாசு வெடித்து மக்கள் கொண்டாட்டம்
ADDED : அக் 21, 2025 01:37 AM
சேலம், தீபாவளி பண்டிகையை புத்தாடை உடுத்தி, பட்டாசுகளை வெடித்து மக்கள் உற்சாகமாக கொண்டாடினர்.
தீபாவளி பண்டிகையான நேற்று, சேலத்தில் அதிகாலையிலேயே விழித்த மக்கள் தலைக்கு எண்ணெய் தேய்த்து குளித்து, புது துணிகளை அணிந்து குடும்பத்துடன் பட்டாசுகளை வெடித்து கொண்டாடினர். குழந்தைகள் வண்ண வண்ண கம்பி, சக்கரம், கோபுரம் போன்ற கண்ணைக்கவரும் மத்தாப்பு வகைகளை கைகளில் பிடித்தும் சுற்றியும் மகிழ்ந்தனர்.
தலை தீபாவளி தம்பதிகள், 1,000 வாலா, 5,000 வாலா என சர வெடிகளை வெடித்து தெருவையே அதிர வைத்தனர்.துடுக்கான சிறுவர்கள், இளைஞர்கள் ஆட்டோ பாம், ஹைட்ரஜன் பாம் என வேட்டுகளை போட்டு சுற்றியுள்ளவர்களை பீதியடைய செய்தனர். மாலைக்கு மேல் வானில் வர்ண ஜாலங்கள் காட்டும் பேன்ஸி ரக வான வெடிகளை நகரம் முழுவதும் மக்கள் வெடித்ததால், இரவை பகலாக்கும் வகையில், வானில் பல வண்ணங்களில் வெடித்து சிதறி கண்களுக்கு விருந்தளித்தது.
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் கவலைகளை மறந்து, வெடிகளை வெடித்து வழக்கமான உற்சாகத்துடன் தீபாவளியை கொண்டாடினர்.
* ஆத்துார், தலைவாசல் பகுதியிலும் தீபாவளியை முன்னிட்டு மக்கள் புத்தாடை அணிந்து, கோவிலில் வழிபாடு செய்தனர். ஆத்துாரில் சமுதாய வேற்றுமை இல்லாமல் முஸ்லிம், கிறிஸ்தவர்கள் பட்டாசுகளை தங்களது குழந்தைகளுக்கு வாங்கி கொடுத்து, வெடித்து மகிழ்ந்தனர்.
கல்லாங்குத்தில் களை கட்டிய காலணி சந்தை
காய்கறி சந்தையை போல், தீபாவளி பண்டிகையையொட்டி, சேலத்தில் நடக்கும் காலணி சந்தையில் விற்பனை களை கட்டியது.
சேலம் கல்லாங்குத்து பகுதியில், நுாற்றுக்கும் மேற்பட்ட மொத்த மற்றும் சில்லரை விற்பனை காலணி கடைகள் ஒரே இடத்தில் அமைந்துள்ளன. தீபாவளியையொட்டி, நேற்று முன்தினம் முதல் நாளை (அக்.,22) வரை நான்கு நாட்கள் காலணி சந்தை துவங்கியது.
மக்கள் புது துணிகள் வாங்கவும், இனிப்பு காரம் மற்றும் பட்டாசுகள் வாங்க குவிவதை போல் இங்கு காலணிகளை வாங்கவும் கூட்டம் அலை மோதியது. 25 ஆண்டுகளுக்கும் மேலாக காலணி சந்தை நடந்து வருகிறது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை காலணிகள், ஷூக்கள், பெண்களுக்கு தேவையான புதுப்புது ரக பேன்ஸி காலணிகள், குழந்தைகளை கவரும் வகையில், நடந்தால் விளக்கு எரியும், இசை வெளிப்படும் ஷூக்கள், அலுவலகத்தில் வேலை செய்யும் ஆண்களுக்கான நவீன ஷூக்கள் என ஆயிரத்துக்கும் மேற்பட்ட வகைகளில் குவிக்கப்பட்டிருந்தன.
குறைந்தது, 100, 150, 200, 250, 300 என 500 ரூபாய் என விற்பனை செய்யப்பட்டது. ஏராளமானோர் வாங்கி சென்றதால் விற்பனை களை கட்டியது. மேலும் தீபாவளி முதல் நாள் மற்றும் நேற்றும் மழை பெய்யாததால், திறந்த வெளியில் கடைகள் அமைத்து விற்பனை செய்தவர்கள் மகிழ்ச்சியடைந்தனர்.