/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
மின்வாரிய அதிகாரிகளை கண்டித்து மக்கள் சாலை மறியல் போராட்டம்
/
மின்வாரிய அதிகாரிகளை கண்டித்து மக்கள் சாலை மறியல் போராட்டம்
மின்வாரிய அதிகாரிகளை கண்டித்து மக்கள் சாலை மறியல் போராட்டம்
மின்வாரிய அதிகாரிகளை கண்டித்து மக்கள் சாலை மறியல் போராட்டம்
ADDED : ஜூலை 01, 2025 01:15 AM
இடைப்பாடி,
தேவூர் அருகே, மின்வாரிய அதிகாரிகளை கண்டித்து கிராம மக்கள் மறியல் போராட்டம் நடத்தியதால், போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
சங்ககிரி தாலுகா, தேவூர் அருகே புளியம்பட்டி ஆலமரம் பஸ் ஸ்டாப் உள்ளது. இங்குள்ள ஆலமரத்தின் கிளை கடந்த, 26ல் முறிந்து விழுந்ததால் அருகில் இருந்த மின்கம்பம் உடைந்தது. அதனால் அந்த பகுதியில் மின்சார பாதிப்பு ஏற்பட்டு, 80 வீடுகளின் மின் இணைப்பு, 30க்கும் மேற்பட்ட விவசாய மோட்டார்களின் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. தேவூர் மின்வாரிய ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு சென்று, உடைந்த மின் கம்பத்தை மாற்றுவதற்காக புதிய மின்கம்பத்தை நட்டு வைக்க முயன்றனர்.
இதற்கு அருகில் இருந்த விவசாய நிலத்தின் உரிமையாளர் எதிர்ப்பு தெரிவித்து, உடைந்த மின்கம்பம் இருந்த இடத்திலேயே, மீண்டும் புதிய கம்பத்தை நட வேண்டும் என எதிர்ப்பு தெரிவித்தார். அதனால் மின்கம்பம் அமைக்கப்படவில்லை. நான்கு நாட்கள் கடந்தும் மின்கம்பத்தை மாற்றி அமைக்காததால், நிலத்திற்கு தண்ணீர் பாய்ச்ச முடியாமல் நுாற்றுக்கும் மேற்பட்ட ஏக்கர் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறி, நேற்று புளியம்பட்டி ஆலமரம் பஸ் ஸ்டாப் அருகே, டிராக்டரை சாலையின் குறுக்கே நிறுத்தி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் காலை நேரத்தில் வேலைக்கு செல்வோர், பள்ளி, கல்லுாரி பஸ், வேன்கள் சாலையில் வரிசையாக நின்றன. குமாரபாளையம்-இடைப்பாடி சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. தேவூர் போலீசார், போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, உடனடியாக மின்கம்பம் மாற்றி அமைத்து மின்சாரம் வழங்க ஏற்பாடு செய்வதாக உறுதி அளித்தனர். பின், மின்வாரிய பணியாளர்கள் வந்து மின்கம்பத்தை நட்டனர். இதையடுத்து அவர்கள் கலைந்து சென்றனர்.