/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
வீடு, கடைகளில் மழைநீர் புகுந்து மக்கள் அவதி
/
வீடு, கடைகளில் மழைநீர் புகுந்து மக்கள் அவதி
ADDED : செப் 21, 2025 01:17 AM
சேலம் :இரவில் பெய்து வரும் தொடர் மழையால், தாழ்வான பகுதியில் உள்ள வீடு, கடைகளுக்குள் மழைநீர் புகுந்து, மக்கள் அவதிப்பட்டனர்.
சேலம் மாவட்டம் முழுதும், ஒரு வாரத்துக்கு மேலாக இரவில் மழை பெய்து வருகிறது. இதனால் பகல் நேர வெப்பம் தணிந்து இரவில் குளிர்காற்று வீசுகிறது. ஏரி, குளம் போன்ற நீர்நிலைகள், நிரம்பும் தருவாயில் உள்ளன. சேலத்தாம்பட்டி ஏரி நிரம்பி வழியும் உபரிநீர், நேற்று முன்தினம் இரவு சிவதாபுரம் பிரதான சாலை, அதன் சுற்றுவட்டார பகுதிகளில் வெள்ளம் போல் பாய்ந்தோடியது.
நேற்று காலை மழைநீருடன் கலந்த உபரிநீர், சாலையில் சென்று கொண்டிருந்தது. மேலும் தாழ்வான பகுதியில் உள்ள வீடுகள், கடைகள், மாவு மில், குடோன்களில் மழைநீர் புகுந்ததால் மக்கள் அவதிக்குள்ளாகினர். சிவதாபுரம் ரயில்வே நுழைவு பாலத்தில், இடுப்பளவுக்கு மேல் குளம் போல் மழைநீர் தேங்கியிருந்தது. இதனால் நேற்று முன்தினம் இரவு முதல், காலை, 9:00 மணி வரை, நுழைவு பாலத்தை யாரும் கடக்க முடியாமல் சேலத்தாம்பட்டி வழியே சுற்றிச்சென்றனர்.
அதேபோல் கிச்சிப்பாளையம், நாராயண நகர், அசோக் நகர், பொன்னம்மாபேட்டை மிலிட்டரி சாலை உள்ளிட்ட தாழ்வான பகுதிகளில் மழைநீருடன் கலந்த கழிவுநீர் சாலைகளில் வெள்ளம் போல் ஓடியதால் மக்கள் அவதிப்பட்டனர்.
நேற்று காலை, 8:00 மணி நிலவரப்படி சேலம் மாவட்டத்தில் அதிகபட்சமாக மேட்டூரில், 38.8 மி.மீ., மழையும், குறைந்த பட்சமாக ஆத்துாரில், 1 மி.மீ., மழையும் பதிவானது.சேறு, சகதியான சாலை
இடைப்பாடி உழவர் சந்தைக்கு தினமும் ஏராளமான மக்கள் வந்து செல்கின்றனர்.
இடைப்பாடி பஸ் ஸ்டாண்ட் சாலையில் இருந்து உழவர் சந்தைக்கு செல்லும் சாலை உள்ளது. அச்சாலை, கடந்த இரு நாட்களாக பெய்த மழையால், சேறு, சகதியாக மாறிவிட்டது. ஒவ்வொரு முறையும் மழை காலங்களில் இதே நிலை தொடர்கிறது. இதனால் காய்கறி வாங்க வரும் மக்கள், பெண்கள், மூதாட்டிகள், விவசாயிகள் உள்ளிட்ட அனைவரும் சிரமத்துக்கு ஆளாகின்றனர். அதனால் சாலையை சீரமைக்க, நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வயலில் ஓடும் தண்ணீர்
பனமரத்துப்பட்டி வட்டாரத்தில், நெல், வாழை, காய்கறி, பழங்கள், அரளி உள்ளிட்ட பயிர்கள் சாகுபடி செய்கின்றனர். ஆனால் கடந்த, 3 நாட்களாக, மாலையில் காற்று, மின்னலுடன் கனமழை பெய்தது. சிறிது இடைவெளி விட்டு இரவிலும் பெய்கிறது. மாலை மற்றும் அதிகாலையில், அரளி மொக்கு பறிக்கும் தொழிலாளர்கள் சிரமத்துக்கு ஆளாகின்றனர். குளம், குட்டை நிரம்பி, ஓடையில் தண்ணீர் வருகிறது. பயிர் செய்த வயலில் மழைநீர் நிரம்பியுள்ளது. பயிர் சேதத்தை தவிர்க்க, வரப்புகளை வெட்டி, தேங்கிய மழைநீரை, வெளியேற்றி வருகின்றனர்.