/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
முதல்வரை கண்டித்து பா.ம.க., ஆர்ப்பாட்டம்: 360க்கும் மேற்பட்டோர் கைது
/
முதல்வரை கண்டித்து பா.ம.க., ஆர்ப்பாட்டம்: 360க்கும் மேற்பட்டோர் கைது
முதல்வரை கண்டித்து பா.ம.க., ஆர்ப்பாட்டம்: 360க்கும் மேற்பட்டோர் கைது
முதல்வரை கண்டித்து பா.ம.க., ஆர்ப்பாட்டம்: 360க்கும் மேற்பட்டோர் கைது
ADDED : நவ 27, 2024 06:45 AM
சேலம்: முதல்வர் ஸ்டாலினை கண்டித்து, சேலம் மாவட்டம் முழுதும், பா.ம.க.,வினர், ஆர்ப்பாட்டம் நடத்தினர். அதில், எம்.எல்.ஏ.,க்கள் உள்பட, 360க்கும் மேற்பட்டோரை, போலீசார் கைது செய்தனர்.
தொழிலதிபர் அதானி குறித்து, பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் எழுப்பிய கேள்விக்கு, 'பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை' என, முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார். இதை கண்டித்து, சேலம் கலெக்டர் அலுவலகம் முன், பா.ம.க., சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. மேற்கு தொகுதி, எம்.எல்.ஏ. அருள் தலைமை வகித்தார். கட்சியினர், தொடர்ந்து சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார், பேச்சு நடத்தினர். பின், அனுமதி இல்லாத இடத்தில் அத்துமீறி மறியலில் ஈடுபட்ட, எம்.எல்.ஏ., உள்பட, 95 பேரை போலீசார் கைது செய்து வேனில் ஏற்றினர். இதுகுறித்து அருள் கூறுகையில், ''எதிர்க்கட்சியின் குரல்வளையை நசுக்கும்படி, முதல்வர் ஸ்டாலின் செயல்படுகிறார். அதானி ஊழலில் தமிழக மின்வாரிய துறை உள்ளதாக, பா.ம.க., நிறுவனர் கேட்டதற்கு பதில் சொல்ல முடியாமல், ஒருமையில் பேசி தரக்குறைவாக நடந்துகொண்டார். இதை வன்மையாக கண்டிப்பதோடு, இதற்கு முதல்வர் மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லையெனில் போராட்டம் தொடரும்,'' என்றார்.
அதேபோல் மேட்டூர் தாலுகா அலுவலகம் அருகே, பா.ம.க.,வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அதற்கு தலைமை வகித்து, மேட்டூர் எம்.எல்.ஏ., சதாசிவம் பேசுகையில், ''டிச., 9ல் சட்டசபை கூட்டம் நடக்க உள்ளது. அதில், பா.ம.க., - எம்.எல்.ஏ.,க்கள், கறுப்பு சட்டை அணிந்து சென்று, கூட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவிப்போம்,'' என்றார். இதில், எம்.எல்.ஏ., சதாசிவம், மாநில இளைஞரணி செயலர் ராஜசேகரன், மாவட்ட ஊராட்சி குழு தலைவி ரேவதி உள்பட, 83 பேரை, போலீசார் கைது செய்து மேட்டூரில் உள்ள தனியார் மண்டபத்தில் சிறை வைத்தனர்.
அரியானுாரில் உள்ள வீரபாண்டி ஒன்றிய அலுவலகம் முன், சேலம் வடக்கு மாவட்ட தலைவர் சிவராமன் தலைமையில் பா.ம.க.,வினர், முதல்வர் ஸ்டாலின் மன்னிப்பு கேட்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் செய்ததாக, சிவராமன் உள்பட, 47 பேரை, ஆட்டையாம்பட்டி போலீசார் கைது செய்து, தனியார் மண்டபத்தில் தங்க வைத்தனர்.
இடைப்பாடியில், சேலம் தெற்கு மாவட்ட செயலர் செல்வகுமார் தலைமையில் கட்சியினர், ஆர்ப்பாட்டம் நடத்தினர். அப்போது, ஸ்டாலின் உருவ பொம்மையை எரிக்க கொண்டு வரப்பட்ட கறுப்பு துணியை, போலீசார் பறிமுதல் செய்தனர். மாவட்ட இளைஞர் சங்க செயலர் ரவி, நகர செயலர் சண்முகம் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதில், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட, 98 பேரை, போலீசார் கைது செய்தனர். அதேபோல் சங்ககிரியில், சேலம் தெற்கு மாவட்ட தலைவர் முத்துசாமி தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற, 38 பேரை, சங்ககிரி போலீசார் கைது செய்தனர்.
ஓமலுாரில், சேலம் மேற்கு மாவட்ட தலைவர் மாணிக்கம் தலைமையில் பா.ம.க.,வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். வன்னியர் சங்க மாநில செயலர், கார்த்தி உள்ளிட்டோர், முதல்வரை கண்டித்து கோஷம் எழுப்பினார். தொடர்ந்து அங்கு வந்த போலீசார், அனைவரையும் கைது செய்து, அரசு பஸ்சில் ஏற்றி, தனியார் மண்டபத்துக்கு அழைத்துச்சென்றனர்.