/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
போலீசார் கெடுபிடி:பக்தர்கள் அதிருப்தி
/
போலீசார் கெடுபிடி:பக்தர்கள் அதிருப்தி
ADDED : நவ 10, 2025 01:50 AM
பனமரத்துப்பட்டி:பனமரத்துப்பட்டி அருகே உள்ள பிடாரி அம்மன் கோவில் திருவிழா நேற்று முன்தினம் நடந்தது. நேற்று திரளான பக்தர்கள் ஆடு, கோழி பலியிட்டு, பொங்கல் வைத்து வழிபட்டனர். கோவில் வளாகம் வெளியே, கிழக்கு பகுதியில் இருந்து வரிசையில் நின்றபடி சென்றால், அம்மனை அருகே சென்று வழிபடலாம்.
வரிசையில் நிற்க முடியாதவர்கள், வடக்கு வாயில் வழியே சென்று, கருவறை வெளியே நின்று, வேல் நடப்பட்டுள்ள இடத்தில் வழிபட்டு, ஆச்சா மர கருப்பு சாமி, முனியப்பன் சிலை ஆகிய இடங்களில் வழிபட்டு திரும்பிச்செல்வர். அங்கே பூசாரி ஒருவர் நின்று, பக்தர்கள் கொடுக்கும் தேங்காய்களை உடைத்து, கற்பூரம் காட்டி பிரசாதம் வழங்குவார்.
ஆனால் நேற்று, வடக்கு வாயிலில் போலீசார் நின்று, பக்தர்களை அனுமதிக்கவில்லை. மாறாக வரிசையில் செல்ல அறிவுறுத்தினர். இதனால் சுற்றுச்சுவர் வெளியே நின்று, அம்மனை பார்க்க முடியாமல் கும்பிட்டுச்சென்றனர். கூட்டம் இல்லாத நிலையில், போலீசார் கெடுபிடி காட்டியதால் பக்தர்கள் அதிருப்தி அடைந்தனர்.

