/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
மாணவர்கள் இடையே தகராறு; இரு பிரிவு பிரச்னையாக மாறியதால் போலீஸ் குவிப்பு
/
மாணவர்கள் இடையே தகராறு; இரு பிரிவு பிரச்னையாக மாறியதால் போலீஸ் குவிப்பு
மாணவர்கள் இடையே தகராறு; இரு பிரிவு பிரச்னையாக மாறியதால் போலீஸ் குவிப்பு
மாணவர்கள் இடையே தகராறு; இரு பிரிவு பிரச்னையாக மாறியதால் போலீஸ் குவிப்பு
ADDED : டிச 23, 2024 10:20 AM
வாழப்பாடி: சேலம் மாவட்டம் வாழப்பாடி அடுத்த வேப்பிலைப்பட்டி ஊராட்சியில் அரசு உயர்நிலைப்பள்ளி வரை மட்டும் உள்ளது.
இதனால் அந்த ஊராட்சி மாணவர்கள், அருகே உள்ள திருமனுார் ஊராட்சிக்கு சென்று, அங்குள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில், பிளஸ் 1, பிளஸ் 2 படிக்கின்றனர். இப்பள்ளியில் திருமனுாரை சேர்ந்த மாணவர்களும் படிக்கின்றனர். அங்கு, பிளஸ் 1 படிக்கும் ஒரு பிரிவை சேர்ந்த மாணவர்களுக்கும், பிளஸ் 2 படிக்கும் மற்றொரு பிரிவை சேர்ந்த மாணவர்களுக்கும், சில ஆண்டுகளுக்கு முன் தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்தது. இதில் அடிக்கடி மாணவர்கள் தகராறில் ஈடுபட்டு வந்தனர்.
இந்நிலையில் கடந்த, 19ல் மாணவர்கள் இடையே தகராறு ஏற்பட்டது. தொடர்ந்து நேற்று முன்தினம் இரவு, 8:00 மணிக்கு, வேப்பிலைப்பட்டியில் உள்ள ஒரு பிரிவை சேர்ந்த பள்ளி மாணவர்களுக்கும், திருமனுாரில் உள்ள மற்றொரு பிரிவை சேர்ந்த முன்னாள் மாணவர் உள்ளிட்ட சிலருக்கும், திருமனுாரில் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஒருவருக்கொருவர் தாக்கி காயமடைந்தனர்.
தொடர்ந்து இரு பிரிவு பிரச்னையாக மாறியதால், வாழப்பாடி டி.எஸ்.பி., ஆனந்த் தலைமையில், 50க்கும் மேற்பட்ட போலீசார், நேற்று அப்பகுதியில் அணிவகுப்பு நடத்தி, பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இருப்பினும் இரு ஊராட்சிகளிலும், பதற்றம் நிலவுகிறது. இதில் வேப்பிலைப்பட்டியை சேர்ந்த தங்க பொண்ணு புகார்படி, 10 பேர் மீதும், திருமனுாரை சேர்ந்த அச்சுனானந்தம் புகாரில், 4 பேர் மீதும், வாழப்பாடி போலீசார் வழக்குப்பதிந்துள்ளனர்.இதுகுறித்து போலீசார் கூறுகையில், ''மாணவர்கள் இடையே ஏற்பட்ட மோதல், இரு சமூக பிரச்னையாக மாற வாய்ப்புள்ளது. இதனால் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்,'' என்றனர்.