/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
பொங்கல் வைபவம் துவக்கம்; 8 ஆண்டுக்கு பின் உருளுதண்டம்
/
பொங்கல் வைபவம் துவக்கம்; 8 ஆண்டுக்கு பின் உருளுதண்டம்
பொங்கல் வைபவம் துவக்கம்; 8 ஆண்டுக்கு பின் உருளுதண்டம்
பொங்கல் வைபவம் துவக்கம்; 8 ஆண்டுக்கு பின் உருளுதண்டம்
ADDED : ஆக 07, 2024 07:41 AM
சேலம்: கோட்டை மாரியம்மன் கோவில் ஆடித்திருவிழாவில் பொங்கல் வைபவம் தொடங்கியது. 8 ஆண்டுக்கு பின், உருளுதண்டம் போட்டு திரளான பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர்.
சேலம் கோட்டை மாரியம்மன் கோவில் ஆடித்திருவிழா மிகச்சிறப்பாக கொண்டாடப்படும். சில ஆண்டுகளாக கோவில் திருப்பணியால், இத்திருவிழா எளிமையாக நடத்தப்பட்டது. உருளுதண்டம் செய்து வழிபட அனுமதிக்கப்படவில்லை. கும்பாபி ேஷகம் நடத்தி முடிக்கப்பட்ட நிலையில் நடப்பாண்டு ஆடித்திருவிழா விமரிசையாக கொண்டாடப்படுகிறது. கடந்த, 23ல் பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. 24ல் கொடியேற்றம், 30ல் கம்பம் நடுதல், திருக்கல்யாண உற்சவம், நேற்று முன்தினம் சக்தி அழைப்பு நிகழ்ச்சிகள் நடந்தன. நேற்று காலை சக்தி கரகம் எடுத்தல் நிகழ்ச்சி நடந்தது.
அலங்கரிக்கப்பட்ட சக்தி கரகம், சின்னமாரியம்மன் கோவில் இருந்து வீதி உலாவாக எடுத்துவரப்பட்டு கோவிலை அடைந்தது. பின் சிறப்பு பூஜை நடத்தப்பட்டது. இதை தொடர்ந்து பக்தர்கள் பொங்கல் வைத்து மாவிளக்கு ஏற்றி வழிபட்டனர். 8 ஆண்டுகளுக்கு பின் உருளுதண்டம் நிகழ்வு நடந்தது. ஏராளமான பக்தர்கள், கோவிலை சுற்றி உருளுதண்டம் போட்டு நேர்த்திக்கடனை செலுத்தினர். இவர்களுக்கு தற்காலிக, 'ஷவர்' ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அம்மனை தரிசிக்க, ஏராளமான பக்தர்கள் குடும்பத்துடன் திரண்டதால் கோவிலில் கூட்டம் அலைமோதியது.
பக்தர்கள், பல்வேறு அமைப்புகள் சார்பில் கோவிலுக்கு வந்த அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டன. கோவிலை சுற்றி கண்காணிப்பு கேமராக்கள் அமைத்து, பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு கண்காணிக்கப்பட்டது. பொங்கல் வைத்தல், உருளுதண்டம் நிகழ்வு, ஆக., 9 வரை நடக்கிறது. 11ல் சத்தாபரணம், 12ல் மஞ்சள் நீராட்டு, 13ல் பால்குட ஊர்வலம் நடக்க உள்ளன.
அதேபோல் சேலம் குகை, மாரியம்மன், காளியம்மன் கோவில், தாதகாப்பட்டி மாரியம்மன், செவ்வாய்ப்பேட்டை மாரியம்மன், அம்மாபேட்டை செங்குந்தர் மாரியம்மன், பலபட்டரை மாரியம்மன், தாதம்பட்டி மாரியம்மன் என சேலத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள கோவில்களில் இன்று பொங்கல் வைபவம் நடக்கிறது. இதையொட்டி சேலம் மாவட்டத்தில் இன்று உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.