ADDED : செப் 30, 2025 02:21 AM
சேலம், சேலம், திருமலைகிரி இடும்பன் வட்டம் பகுதியை சேர்ந்தவர் மோகன்ராஜ். இவருக்கும் வேடுகாத்தான்பட்டியை சேர்ந்த காளியப்பன், 32, ஆகியோருக்கும் இடையே கடந்த சில மாதங்களுக்கு முன்பு, பாறைவட்டம் அங்காளம்மன் கோவில் பண்டிகையின் போது மோதல் ஏற்பட்டது.
இரு தரப்பினரும் ஒருவருக்கொருவர் தாக்கிக் கொண்டனர். இரு தரப்பினர் மீதும் இரும்பாலை போலீஸ், கொண்டலாம்பட்டி போலீசில், 6 வழக்குகள் உள்ளன. இந்நிலையில் கடந்த, 15ல் மோகன்ராஜ் அவரது வீட்டில் நண்பர் சிவானந்தனுடன் இருந்தார். அப்போது காளியப்பன், தங்கராஜ், 30, சூர்யா, 26, உள்ளிட்ட சிலர் பைக்கில் வந்தனர். அப்போது அவர்கள் மோகன்ராஜ், சிவானந்தம் ஆகியோரை கடுமையாக தாக்கி பைக்கில் கடத்தி சென்றனர். பின்னர் வேடுகாத்தான்பட்டி அம்மன் கோவிலில் வைத்து தாக்கினர்.
மேலும் கத்தியால் மோகன்ராஜ் தலையில் வெட்டினர். அவரது நண்பர் சிவானந்தத்திற்கும் பலத்த அடி ஏற்பட்டது. இருவரும் சேலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இதில் சிகிச்சை பலனின்றி கடந்த, 16ல் மோகன்ராஜ் உயிரிழந்தார். மோகன்ராஜை தாக்கிய காளியப்பன் உள்ளிட்ட, 14 பேர் மீது வழக்கு பதிவு செய்த இரும்பாலை போலீசார், 13 பேரை கைது செய்தனர். இந்நிலையில் வழக்கில் தொடர்புடைய, 17 வயது சிறுவனை நேற்று அவரது வீட்டில் வைத்து போலீசார் கைது செய்து, சிறுவர் சீர்திருத்தப்பள்ளிக்கு அனுப்பி வைத்தனர்.