/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
பால் கொள்முதல் விலையை உயர்த்தக்கோரி ஆர்ப்பாட்டம்
/
பால் கொள்முதல் விலையை உயர்த்தக்கோரி ஆர்ப்பாட்டம்
ADDED : செப் 23, 2025 06:53 AM
சேலம்; கால்நடை தீவனங்கள் விலை, பல மடங்கு உயர்ந் துள்ள நிலையில், பால் கொள்முதல் விலையை லிட்டருக்கு, 15 ரூபாய் உயர்த்தி வழங்கக்கோரி, ஆவின் பால் பண்ணை முன், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர், கறவை மாடுகளுடன் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில், சேலம் தளவாய்ப்பட்டியில் உள்ள ஆவின் பால் பண்ணை முன், நேற்று சங்கத்தின் மாநில தலைவர் வேலுசாமி தலைமையில், கொள்முதல் விலையை லிட்டருக்கு, 15 ரூபாய் உயர்த்தி வழங்கக்கோரி ஆர்ப்பாட்டம் நடந்தது.
பின், வேலுசாமி பேசியதாவது:
தற்போது தமிழக அரசு, பால் உற்பத்தியாளர்களிடம் இருந்து பசும் பால் லிட்டர், 38 ரூபாய், எருமை பால் லிட்டர், 48 ரூபாய்க்கு கொள்முதல் செய்கிறது.
அதே வேளையில் கால்நடைகளுக்கு தேவையான அடர் தீவனம், பசுந்தீவனம், உலர் தீவனங்களின் விலை பல மடங்கு உயர்ந்து விட்டது. பால் உற்பத்தியாளர்களுக்கு இந்த விலை கட்டுப்படியாகாது.
எனவே தமிழக அரசு, பால் கொள்முதல் விலையை லிட்டருக்கு, 15 ரூபாய் உயர்த்தி வழங்க வேண்டும்.
இதுகுறித்து, அரசுக்கு பலமுறை கோரிக்கை வைத்தும் நடவடிக்கை எடுக்காததால், கறவை மாடுகளுடன் பால் உற்பத்தியாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்துகின்றனர்.
இதற்கு அரசு செவி சாய்க்கா விட்டால், அக்டோபர், 22 முதல் கூட்டுறவு சங்கங்களுக்கு பால் கொடுக் காமல் நிறுத்தி வைக்கும் போராட்டத்தில் ஈடுபடுவோம்.
இவ்வாறு அவர் கூறினார்.