/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
ஆரூர்பட்டி உள்பட 8 ஏரிகளை நிரப்ப ஆர்ப்பாட்டம்
/
ஆரூர்பட்டி உள்பட 8 ஏரிகளை நிரப்ப ஆர்ப்பாட்டம்
ADDED : டிச 19, 2024 01:32 AM
தாரமங்கலம், டிச. 19-
காவிரி உபரிநீர் திட்டத்தில் மானத்தாள் ஏரி நிரம்பி, பெரியேரிபட்டி, தாரமங்கலம் ஏரிக்கு தண்ணீர் செல்கிறது. அருகே உள்ள மல்லிக்குட்டை, ஆரூர்பட்டி, ராமிரெட்டிப்பட்டி உள்பட, 8 ஏரிகளுக்கு உபரிநீர் செல்லவில்லை. இதனால் மானத்தாள் ஏரியில் இருந்து வெளியேறும் நீர், மற்ற ஏரிகளுக்கு செல்லும்படி, இணைப்பு கால்வாய் அமைக்கும் பணியை விரைந்து முடிக்க, தமிழக அரசை வலியுறுத்தி, ராமிரெட்டிப்பட்டி ஏரியில் கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது.
காவிரி உபரிநீர் நடவடிக்கை குழு, அனைத்து விவசாய சங்கம், அப்பகுதியை சேர்ந்த அனைத்து கட்சியினர் நடத்திய ஆர்ப்பாட்டத்துக்கு, வன்னியர் சங்க மாநில செயற்குழு உறுப்பினர் தன்ராஜ் தலைமை வகித்தார். அதில், 'தமிழக அரசே, உபரிநீர் மூலம் எங்கள் பகுதி ஏரிகளை நிரப்ப நடவடிக்கை எடு' என, கோஷம் எழுப்பினர்.
இதில் குழு மாநில செயலர் சுரேஷ், அ.தி.மு.க., ஒன்றிய செயலர் காங்கேயன், பா.ம.க., மாநில செயற்குழு உறுப்பினர் பாபு, ஒன்றிய கவுன்சிலர் சரவணன், செலவடை ஊராட்சி தலைவர் குமார் உள்பட பலர் பங்கேற்றனர்.

