/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
நுரையீரல் தீவிர சிகிச்சை பிரிவு தொடக்கம்
/
நுரையீரல் தீவிர சிகிச்சை பிரிவு தொடக்கம்
ADDED : பிப் 03, 2026 07:14 AM

சேலம்: சேலம், ஸ்ரீகோகுலம் மருத்துவமனையில் நுரையீரல் தீவிர சிகிச்சை பிரிவு தொடங்கப்பட்டுள்ளது.
புள்ளி விபரங்களின்படி, நுரையீரல் பாதிப்பு மூலம் மனித உயிரிழப்புகள் ஏற்படுவது மூன்றாம் இடத்தில் உள்ளது. நுரையீரல் தொற்றுகள், நீண்ட நாள் புகைப்பழக்கம், சுற்றுப்புற மாசுக்கள் மற்றும் ஆஸ்துமா போன்ற காரணங்களால், நுரையீரல் செயலிழப்பு ஏற்பட்டு உயிருக்கு ஆபத்தான நிலை உருவாகிறது.
இந்த வகையான வியாதிகளை கண்டறிய உதவும் நவீன, 'சி.டி' ஸ்கேன், நுரையீரல் உள்நோக்கி பரிசோதனை மற்றும் ரத்த பரிசோதனை உள்ளடக்கிய நுரையீரல் தீவிர சிகிச்சை பிரிவு, ஸ்ரீ கோகுலம் மருத்துவமனையில் துவங்கப்பட்டுள்ளது. கோகுலம் மருத்துவமனை குழுமங்களின் மேலாண்மை இயக்குனர் டாக்டர் அர்த்தநாரி தலைமையில் நடந்த நிகழ்ச்சியில், சேலம் இந்திய மருத்துவ சங்க செயலாளர் டாக்டர் விஷ்ணு பிரசாத், நுரையீரல் தீவிர சிகிச்சை பிரிவை திறந்து வைத்தார். முன்னாள் தேசிய மருத்துவ சங்க துணைத் தலைவர் டாக்டர் பிரகாசம் சிறப்பாளராக கலந்து கொண்டார்.
நுரையீரல் தீவிர சிகிச்சை பிரிவில் அதிநவீன செயற்கை சுவாச கருவிகள், நுரையீரல் உள்நோக்கி கருவிகள், எக்மோ கருவிகள் மற்றும் பிராண கரியமில வாயு பரிசோதனை கருவிகள் நிறுவப்பட்டுள்ளதாக டாக்டர் அர்த்தநாரி தெரிவித்தார். 24 மணி நேரமும் செயல்படும் இந்த பிரிவில் அனுபவமிக்க நுரையீரல் சிகிச்சை நிபுணர்கள், தீவிர சிகிச்சை நிபுணர்கள், நுரையீரல் இயன்முறை நிபுணர்கள் மற்றும் செவிலியர்கள் பணியாற்றுவதையும் அவர் குறிப்பிட்டார். நிகழ்ச்சியில் மருத்துவர்கள் பிரபுராம்நாத், ராஜேஷ், ஜெயதேவ் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

