ADDED : மார் 07, 2026 04:02 AM

சேலம்: தமிழக முதல்வர் தலைமையில், சென்னையில், 'உங்க கனவ சொல்லுங்க' திட்டத்தின் நிறைவாக, 'கனவுகள் மெய்ப்படும்' தலைப்பில் கலந்துரையாடல், வீடியோ கான்பரன்ஸ் மூலம் நேற்று நடந்தது. அதை ஒட்டி சேலத்தில் நடந்த நிகழ்வில் அமைச்சர் ராஜேந்திரன், 'சேலம் மாவட்ட இலக்கு - 2030 உத்திகள் மற்றும் செயல்திட்டங்கள்' புத்தகத்தையும், 5 ஆண்டு சாதனை மலரையும் வெளியிட்டார்.
தொடர்ந்து அவர் பேசியதாவது: சேலம் மாவட்ட ஊரக பகுதியில், 6,50,560 குடும்பம், நகர் பகுதியில், 3,20,685 குடும்பம் என, 9,71,245 குடும்பத்திடம் கணக்கெடுப்பு நடத்தி, சிறந்த கட்டமைப்பு, தொழில், பொருளாதார வளர்ச்சி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் ஒருங்கிணைந்த வளர்ச்சியை எட்ட, 'சேலம் மாவட்ட இலக்கு - 2030 உத்திகள், செயல்திட்டங்கள்' புத்தகம் வெளியிடப்பட்டுள்ளது. மாவட்டத்தில் கடந்த, 5 ஆண்டில் துறை வாரியாக செயல்படுத்தப்பட்ட திட்டங்கள் அடங்கிய சாதனை மலரும் வெளியிட்டுள்ளோம்.இவ்வாறு அவர் பேசினார்.
இதையடுத்து, 'உங்க கனவ சொல்லுங்க' கணக்கெடுப்பு பணியில் சிறப்பாக பணியாற்றிய, 45 தன்னார்வலர்களுக்கு பாராட்டு சான்று, 10 மாற்றுத்திறனாளிக்கு, தலா, 8 கிராம் தங்க நாணயங்களை வழங்கினார். கலெக்டர் பிருந்தாதேவி, எம்.பி., செல்வகணபதி, மேயர் ராமச்சந்திரன் உள்பட பலர் உடனிருந்தனர்.
