/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
நகரங்களுக்குள் செல்ல நிர்பந்தம் எஸ்.இ.டி.சி., பஸ் பயணியர் அவதி
/
நகரங்களுக்குள் செல்ல நிர்பந்தம் எஸ்.இ.டி.சி., பஸ் பயணியர் அவதி
நகரங்களுக்குள் செல்ல நிர்பந்தம் எஸ்.இ.டி.சி., பஸ் பயணியர் அவதி
நகரங்களுக்குள் செல்ல நிர்பந்தம் எஸ்.இ.டி.சி., பஸ் பயணியர் அவதி
ADDED : பிப் 19, 2024 12:43 PM
தென் மாவட்டங்களின் முக்கிய நகரங்களான கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி, செங்கோட்டை, துாத்துக்குடி, திருச்செந்துார், நாகர்கோவில், மார்த்தாண்டம், கேரள மாநிலம் திருவனந்தபுரம் ஆகிய இடங்களில் இருந்து, 22 பஸ்கள், மதுரை, சேலம் வழியே பெங்களூருக்கு இயக்கப்படுகின்றன. இதில் நெல்லையில் இருந்து புறப்படும் பஸ்கள், மற்ற நகர பைபாஸ்களில் பயணியரை ஏற்றி, இறக்கி சேலம் நகருக்குள் மட்டும் சென்று பெங்களூரு அடைவது வழக்கம்.
இந்த பஸ்கள் நெல்லையில் இருந்து, 12 மணி நேரம், பிற நகரங்களில் இருந்து, 13 முதல், 14 மணி நேரத்தில் பெங்களூருவை அடைகின்றன. ஆனால் நேற்று முன்தினம் முதல், தென் மாவட்ட பஸ்கள், மதுரையின் ஆரப்பாளையம், மாட்டுத்தாவணி பஸ் ஸ்டாண்டுக்குள் சென்று வர வேண்டும். திண்டுக்கல், கரூர், நாமக்கல், தர்மபுரி நகரங்களுக்குள் சென்று வர அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
பஸ்கள் மதுரைக்குள் சென்று வந்ததால் அங்கு, 1:00 மணி நேரம், பிற நகரங்களுக்குள் சென்று வந்ததால், 1:30 மணி நேரம் என, 20க்கும் மேற்பட்ட பஸ்கள், வழக்கமான நேரத்தை விட, 2:00 முதல், 2:30 மணி நேரம் தாமதமாக நேற்று பெங்களூருவை அடைந்தன. இது பயணியர் மட்டுமின்றி டிரைவர், கண்டக்டர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது.
இதுகுறித்து தமிழ்நாடு அரசு போக்குவரத்து பணியாளர் சம்மேளனம் மாநில பொது செயலர் பத்மநாபன் கூறியதாவது: ஆம்னி பஸ்களை விட கட்டணம் குறைவு. அவற்றுக்கு இணையான வேகம், பயண நேரம் குறைவு என்பதால், எஸ்.இ.டி.சி., பஸ்களை, மக்கள் பயன்படுத்துகின்றனர். ஆனால் அனைத்து பஸ் ஸ்டாண்டுகளுக்குள் செல்ல வாய்மொழி உத்தரவிட்டுள்ளது, பயணியருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த நடைமுறையை அதிகாரிகள் கைவிடாவிட்டால், எஸ்.இ.டி.சி.,க்கு இழப்பு ஏற்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
விரைவு போக்குவரத்து மேலாண் இயக்குனர் மோகன் கூறுகையில், ''எஸ்.இ.டி.சி., நிர்வாக வருவாய் அதிகரிக்கும் நோக்கில் பஸ்கள் இயக்கப்படுகின்றன. அதன் இயக்கத்தில் மாற்றப்பட்டுள்ளது குறித்து விசாரித்து, குறை இருப்பின் சரி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.

