ADDED : நவ 21, 2025 01:22 AM
காங்கேயம், காங்கேயம் அருகே வட்டமலைபாளையம் திருமாயி தோட்டத்தில் வசிப்பவர் சிவ சுப்பிரமணியம், 45; பட்டி அமைத்து ஆடுகள் வளர்க்கிறார்.
நேற்று முன்தினம் இரவு வழக்கம்போல், 90 ஆடுகளை தோட்டத்து பட்டியில் அடைத்து வைத்து சென்றார். நேற்று காலை சென்று பார்த்தபோது, 16 ஆடுகள் இறந்தும், 8 ஆடுகள் உயிருக்கு போராடியபடியும் கிடந்தன.
தகவலின்படி முதலிபாளையம் கால்நடை மருத்துவர் அருள்நிதி தலைமையிலான குழுவினர் சென்றனர். காயமடைந்த ஆடுகளுக்கு சிகிச்சை அளித்தனர். ஆனாலும் எட்டு ஆடுகளும் அடுத்தடுத்து இறந்தன. ஆடுகளை கடித்து கொன்றது தெருநாய்கள் என்பது தெரிய வந்தது. இறந்த ஆடுகளுக்கு இழப்பீடு தரவேண்டும். இல்லையேல் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று, விவசாயிகள் திரண்டதால், பரபரப்பு ஏற்பட்டது.
ஊதியூர் இன்ஸ்பெக்டர், வருவாய் துறையினர், கால்நடை மருத்துவர் ஆகியோர், பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.
இறந்த ஆடுகளின் மதிப்பீடு, 3 லட்சம் ரூபாய் என தெரிவித்தனர்.

