ADDED : மார் 24, 2025 06:55 AM
சாலை பணி தொடக்கம்
பனமரத்துப்பட்டி: நாழிக்கல்பட்டி ஊராட்சி அம்பேத்கர் நகரில் தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில், 40 லட்சம் ரூபாயில் கான்கிரீட் சாலை அமைக்க திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டது. அங்கு சாலை அமைக்கும் பணியை, தி.மு.க.,வின் சேலம் கிழக்கு மாவட்ட துணை செயலர் சுரேஷ்குமார், நேற்று தொடங்கி வைத்தார். ஒன்றிய செயலர் உமாசங்கர், ஊராட்சி செயலர் சரவணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
நீர்மோர் பந்தல் திறப்பு விழா
இடைப்பாடி: சேலம் மேற்கு மாவட்டம், இடைப்பாடி நகர தி.மு.க., சார்பில், நீர்மோர் பந்தல் திறப்பு விழா நேற்று நடந்தது. நகர செயலர் பாஷா தலைமை வகித்தார். மேற்கு மாவட்ட செயலரான, சேலம் எம்.பி., செல்வகணபதி திறந்து வைத்து, மக்களுக்கு மோர், இளநீர், நுங்கு, தர்பூசணி, வெள்ளரிக்காய் உள்ளிட்டவற்றை வழங்கினார். மாவட்ட துணை செயலர் சம்பத்குமார், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் முருகேசன், பூவா கவுண்டர், ஒன்றிய செயலர்கள் பரமசிவம், நல்லதம்பி உள்பட பலர் பங்கேற்றனர்.அதேபோல் சேலத்தில், நீர்மோர் பந்தலை அமைச்சர் ராஜேந்திரன் திறந்து வைத்து மக்களுக்கு வழங்கினார்.
தி.மு.க., ஆலோசனை
ஓமலுார்: தி.மு.க.,வின், சேலம் மத்திய மாவட்டம் காடையாம்பட்டியில், மேற்கு ஒன்றிய பாக முகவர், உறுப்பினர் கூட்டம் நேற்று நடந்தது. தொகுதி பொறுப்பாளர் சுகவனம் தலைமை வகித்தார். அதில் சேலம் மத்திய மாவட்ட பொருளாளர் காத்திகேயன், பல்வேறு ஆலோசனைகள் வழங்கினார். அதில் ஓட்டுச்சாவடி நிலை உறுப்பினர் அனைவரும் தலா, 10 பேரை, தி.மு.க., - ஐடி விங் சேனலை தொடரச்செய்ய அறிவுறுத்தப்பட்டது. ஒன்றிய செயலர்கள் அறிவழகன், ரவிச்சந்திரன் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.
'சிக்னல்' கம்பம் சரிந்து கார் மீது விழுந்து விபத்து
சேலம்: வேலுார் மாவட்டம் குடியாத்தத்தை சேர்ந்தவர் ஹரீஷ், 35. இவரது மனைவி மோனிகா, 30. இருவரும், காரில், கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் சென்றுவிட்டு ஊருக்கு திரும்பி கொண்டிருந்தனர். ஹரீஷ் ஓட்டினார். நேற்று இரவு, சேலம், ஏ.வி.ஆர்., ரவுண்டானா அருகே வந்தபோது, அதன் மீது அங்கிருந்த போக்குவரத்து சிக்னல் கம்பம் திடீரென சரிந்து விழுந்து உடைந்தது. இந்த விபத்தில் காரின் முன்பகுதி சேதமானது. தம்பதியர் காயமின்றி தப்பினர். சூரமங்கலம் போலீசார், சிக்னல் கம்பத்தை அப்புறப்படுத்தினர். பின் கார் புறப்பட்டது. விபத்தால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
எரிபொருள் நுகர்வோருக்கு 28ல் குறைதீர் கூட்டம்
சேலம்: சேலம் டி.ஆர்.ஓ., ரவிக்குமார் அறிக்கை: சேலம் மாவட்டத்தில் எரிவாயு உருளை பதிவு செய்வதிலும், அதில் உள்ள குறைபாடு, புகார் தொடர்பாக, வாடிக்கையாளர், அனைத்து எண்ணெய் நிறுவன ஒருங்கிணைப்பாளர், எரிவாயு முகவர்களை கொண்டு, டி.ஆர்.ஓ., தலைமையில், எரிவாயு நுகர்வோருக்கு மார்ச் குறைதீர் கூட்டம், வரும், 28 மதியம், 3:00 மணிக்கு, கலெக்டர் அலுவலக அறை எண்: 115ல் நடக்க உள்ளது. அதில் மாவட்டத்தில் உள்ள எரிவாயு நுகர்வோர், குறைகளை மனுக்களாக அளித்து பயன்பெறலாம்.