ADDED : மே 08, 2026 07:10 AM
சேலம்: சேலம், சன்னியாசிகுண்டை சேர்ந்தவர் தனபால், 75. இவருக்கு, 10,000 சதுரடி நிலம் அதே பகுதியில் உள்ளது. அதில் பங்கை பிரித்து தரக்கோரி, அவரது மகன் ஸ்ரீதர், 42, அடிக்கடி தந்தையிடம் தகராறு செய்து வந்தார். நேற்று முன்தினம் மதியம், தனபாலிடம் நிலம் குறித்து கேட்டு மீண்டும் தகராறில் ஈடுபட்டார். அப்போது நிலத்தை பிரித்து தர முடியாது என தனபால் கூறியதால், ஆத்திரமடைந்த ஸ்ரீதர், கத்தியால் குத்தி கொலை செய்தார். இதனால் ஸ்ரீதரை, கிச்சிப்பாளையம் போலீசார் கைது செய்தனர். இதற்கு உடந்தையாக இருந்ததாக, தனபாலின் தம்பி நடராஜ், 65, என்பவரையும் நேற்று போலீசார் கைது செய்தனர்.
இதுகுறித்து போலீசார் கூறியதாவது: ஸ்ரீதரை கைது செய்து விசாரித்தபோது, அதிகளவில் கடன் உள்ளதால் திருப்பி கட்ட முடியாமல் அவதிப்பட்டதாக தெரிவித்தார். அவரது, 2 பெண் குழந்தைகளையும் காப்பாற்ற முடியவில்லை என்றும், அதனால் தந்தை நிலத்தை கேட்டபோது, அவர் தராததால் ஆத்திரமடைந்து கொலை செய்து விட்டதாக வாக்குமூலம் அளித்தார். மேலும் விசாரணையில், நிலத்தை பிரித்து தரும்படி கேட்கக்கோரி, தனபாலின் சகோதரர் நடராஜ், 65, துாண்டியது தெரிந்தது. இதனால் கொலைக்கு உடந்தையாக இருந்த, நடராஜை கைது செய்தோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.
