சிறப்பு சுருக்க முறை திருத்தப்பணி ஆலோசனை வாக்காளர் பட்டியல் குளறுபடியை களைய கோரிக்கை
சிறப்பு சுருக்க முறை திருத்தப்பணி ஆலோசனை வாக்காளர் பட்டியல் குளறுபடியை களைய கோரிக்கை
ADDED : நவ 22, 2026 01:27 AM
சேலம்: சேலம் கலெக்டர் அலுவலகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்தப்பணி தொடர்பாக, அங்கீகரிப்பட்ட அரசியல் கட்சிகளுடன் ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது.
சிறப்பு பார்வையாளர் விவேகானந்தன் தலைமை வகித்தார்.அதில், தி.மு.க.,வை சேர்ந்த கணேசன் பேசுகையில், ''மாவட்டத்தில் உள்ள, 11 சட்டபை தொகுதிகளிலும் குறைந்தது தலா, 150 முதல், 200 வரை, மாற்றுத்திறனாளிகள் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளனர். நல்ல உடல்வாகு, முழுத்திறன் கொண்ட நபர்களை, ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்களின் கவனக்குறைவால் மாற்றுத்திறனாளிகளாக சேர்க்கப்பட்டுள்ளது எந்த விதத்தில் நியாயம்? இது வாக்காளர் பட்டியலில் தெரியாது. தேர்தல் பிரிவில் உள்ள கணினி டேட்டா என்ட்ரியில் மட்டும், இந்த தவறான பதிவு உள்ளது. தவறான பதிவை நீக்க நடவடிக்கை தேவை,'' என்றார்.
கலெக்டர் இளம்பகவத், ''தவறான பதிவு கொண்ட பட்டியல் இருந்தால் கொடுங்கள். நீக்க நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.
கணேசன், ''தேர்தல் பிரிவு கணினியில் தான், தவறான பதிவு உள்ளது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தான் கண்டறிந்து நீக்க வேண்டும்,'' என்றார்.
தொடர்ந்து, வாக்காளர் பட்டியலில் புது வாக்காளர்களை சேர்க்க அதிக அளவில் விழிப்புணர்வு ஏற்படுத்த, அரசியல் கட்சியினர் வலியுறுத்தினர்.
பின் சிறப்பு பார்வையாளர் விவேகானந்தன் பேசியதாவது:
மாவட்டத்தில், 11 தொகுதிகளிலும் சிறப்பு சுருக்கமுறை திருத்தப்பணி, நவ., 21, 22(நேற்று, இன்று), 29ல் நடக்கிறது. 2027 ஜன., 1 அல்லது அதற்கு முன், 18 வயது பூர்த்தி அடைவோர், பெயர் விடுபட்டவர், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க படிவம், 6, நீக்க, 7, குடியிருப்பு மாற்றம், திருத்தம் செய்ய, மாற்று வாக்காளர் புகைப்பட அடையாள அட்டை பெற, படிவம், 8ஐ பயன்படுத்த வேண்டும். 17 வயது பூர்த்தி அடைந்தவர்கள், 2027 ஏப்., 1, ஜூலை, 1, அக்., 1 ஆகிய காலாண்டு தேதிகளை தகுதி நாளாக கொண்டு, 18 வயது பூர்த்தி அடையும் நபர்கள் பட்டியலில் பெயர் சேர்க்க படிவம், 6ஐ பயன்படுத்தலாம். தவிர, V0ters.eci.gov.in என்ற இணையதளம், 'வோட்டர் ஹெல்ப்லைன்' என்ற கைபேசி செயலி மூலம் விண்ணப்பிக்கலாம். இதுதொடர்பாக அதிக அளவில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். மேலும், 94449 - 49299 என்ற மொபைல் எண்ணில் தகவல் தெரிவிக்கலாம்.
இவ்வாறு அவர் பேசினார்.
