ADDED : நவ 07, 2025 12:55 AM
சேலம், சேலத்தில் நேற்று காலை, 6:00 முதல், 9:30 மணி வரை மழை பெய்தது. இதனால் மாணவர்கள், பள்ளி, கல்லுாரிகளுக்கு விடுமுறை விடுவர் என எதிர்பார்த்துக்கொண்டிருந்தனர். ஆனால், 7:30 மணி வரை, விடுமுறை குறித்து எந்த அறிவிப்பும் வராததால், மாணவ, மாணவியர் ஏமாற்றம் அடைந்தனர்.
பின் மழையில் நனைந்தபடியும், குடை பிடித்தபடியும், 'ரெயின்கோட்' அணிந்தும் சென்றனர். அதேபோல் அலுவலகங்களில் பணிபுரிவோரும், மழையில் நனைந்தபடி சென்றனர். அதேநேரம் கட்டுமானப்பணி தினக்கூலிக்கு செல்லும் வேலையாட்களுக்கு, மழையால் வேலை கிடைக்கவில்லை. இதனால் அவர்கள் வருவாய் பாதிக்கப்பட்டது.
நகரின் பல்வேறு பகுதிகளில் சாலைகள் பெயர்க்கப்பட்டு, சாலை போடும் பணி நடந்து வரும் நிலையில், மழையால் அப்பகுதிகள் சேறு, சகதியாக மாறி, பாதசாரிகள், வாகன ஓட்டிகள் சிரமத்துக்குள்ளாகினர்.
ஏற்காட்டில் கனமழை
ஏற்காட்டில் நேற்று முன்தினம் நள்ளிரவு, 1:30 மணிக்கு கனமழை பெய்யத்தொடங்கி நேற்று காலை, 6:40 மணி வரை கொட்டித்தீர்த்தது. பின் கனமழை குறைந்து, 8:30 மணி வரை லேசான மழையாக பெய்தது. இதன் மூலம், 30.4 மி.மீ., அளவுக்கு மழை கொட்டித்தீர்த்தது. இதனால் நேற்று மதியம் வரை குளிரின் தாக்கம் இருந்தது. பின் வெயில் தென்பட்டது.
மேலும் மலைப்பாதை, 4வது கொண்டை ஊசி வளைவு அருகே சாலையோரம் அடுக்கப்பட்டிருந்த கருங்கல் கட்டடம் சரிந்து, லேசான நிலச்சரிவு ஏற்பட்டது.

