/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
'சஸ்பெண்ட்' உதவி பேராசிரியர் 'டிஸ்மிஸ்'; பெரியார் பல்கலை பதிவாளர் அதிரடி
/
'சஸ்பெண்ட்' உதவி பேராசிரியர் 'டிஸ்மிஸ்'; பெரியார் பல்கலை பதிவாளர் அதிரடி
'சஸ்பெண்ட்' உதவி பேராசிரியர் 'டிஸ்மிஸ்'; பெரியார் பல்கலை பதிவாளர் அதிரடி
'சஸ்பெண்ட்' உதவி பேராசிரியர் 'டிஸ்மிஸ்'; பெரியார் பல்கலை பதிவாளர் அதிரடி
ADDED : டிச 11, 2024 07:17 AM
ஓமலுார் : பணியிடை நீக்கம் செய்யப்பட்டிருந்த உதவி பேராசிரியரை, பணி நீக்கம் செய்து, பெரியார் பல்கலை பதிவாளர் உத்தரவிட்டுள்ளார்.
சேலம் பெரியார் பல்கலையில் வரலாற்று துறை உதவி பேராசிரியராக பிரேம்குமார், 35, பணியாற்றினார். பெரியார் பல்கலை ஆசிரியர் சங்க பொதுச்செயலராகவும் இருந்தார். இவர் மீது, பல்கலை ஆட்சிக்குழு தீர்மானங்களை பொது வெளியில் கசிய விட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. அதற்கு விளக்கம் கேட்டு, 2022 ஏப்., 20ல், அப்போது பதிவாளராக இருந்த தங்கவேல் மூலம், பணி இடை நீக்கம் செய்யப்பட்டார்.
பிரேம்குமார், பல்வேறு விளக்க கடிதங்களை வழங்கிய நிலையில், 2024 நவ., 22ல், 116வது ஆட்சி குழு கூட்டத்தில், அவர் மீதான குற்றச்சாட்டு குறித்து ஆலோசிக்கப்பட்டது. அதில் அவரை பணி நீக்கம் செய்ய முடிவு செய்து, ஒப்புதல் பெறப்பட்டுள்ளது. தொடர்ந்து கடந்த, 5ல், உதவி பேராசிரியர் பிரேம்குமாரை பணியில் இருந்து நீக்கம் செய்ததாக, பல்கலை பதிவாளர் விஸ்வநாத மூர்த்தி உத்தரவு பிறப்பித்து, அந்த கடிதத்தை, பிரேம்குமாருக்கு அனுப்பியுள்ளார்.
கண்டனம்
பெரியார் பல்கலை தொழிலாளர் சங்க அமைப்பு செயலர் கிருஷ்ணவேணி அறிக்கை:கடந்த, 114வது ஆட்சிக்குழு கூட்டத்தில் பிரேம்குமார் பணிநீக்க முன்மொழிவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதை மீறி துணைவேந்தர் ஜெகநாதன், தமிழக கவர்னருக்கு கடிதம் எழுதி, பணி நீக்கம் செய்ய கேட்டுள்ளார். அவரோ, சட்டப்படி நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தி, அக்கடிதத்தை திருப்பி அனுப்பியுள்ளார்.
அப்படி அனுப்பிய கோப்பு குறித்து தெரிவிக்காமல், 116வது ஆட்சிக்குழு கூட்டத்தில், பிரேம்குமாரை பணி நீக்கம் செய்ய முடிவெடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது. ஆனால் ஆட்சி குழுவில் பங்கேற்ற அரசுத்துறை செயலர்கள், அரசு நியமனம் செய்த உறுப்பினர்கள், பணி நீக்க உத்தரவு தொடர்பான தகவலை ரகசியமாக வைத்திருந்தது, இந்த அரசுக்கு அவப்பெயரை கொண்டு வருகிறது என, சங்கம் கருதுகிறது.
பல்கலை நிர்வாகத்தையும், அரசு நியமித்த ஆட்சி குழு உறுப்பினர்களையும், சங்கம் வன்மையாக கண்டிக்கிறது. இந்த விஷயத்தில் முதல்வர் ஸ்டாலின் தலையிட்டு, உதவி பேராசிரியர் பிரேம்குமாருக்கு நியாயம் வழங்க வேண்டும்.