/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
தி.கோடு சாக்கு குடோனில் அதிகாலை பயங்கர தீ விபத்து: ரூ.3 கோடிக்கு சேதம்
/
தி.கோடு சாக்கு குடோனில் அதிகாலை பயங்கர தீ விபத்து: ரூ.3 கோடிக்கு சேதம்
தி.கோடு சாக்கு குடோனில் அதிகாலை பயங்கர தீ விபத்து: ரூ.3 கோடிக்கு சேதம்
தி.கோடு சாக்கு குடோனில் அதிகாலை பயங்கர தீ விபத்து: ரூ.3 கோடிக்கு சேதம்
ADDED : பிப் 26, 2025 07:22 AM
திருச்செங்கோடு: திருச்செங்கோட்டில், நேற்று அதிகாலை, சாக்கு குடோனில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில், மூன்று கோடி ரூபாய் மதிப்பிலான சாக்கு பைகள், பொருட்கள் எரிந்து சாம்பலாகின.
நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு கொல்லப்பட்டியை சேர்ந்தவர் பரமசிவம், 58; இவர், சந்தைப்பேட்டை பகுதியில், சாக்கு குடோன் வைத்து நடத்தி வருகிறார். இந்த குடோனில், நேற்று அதிகாலை, 3:00 மணி அளவில் திடீரென கரும்புகை வெளியேறி உள்ளது. சற்று நேரத்தில், குடோனின் மேல் பகுதியில் இருந்த ஓடுகள் வெடித்து சிதறின. இதையறிந்த அக்கம் பக்கத்தினர், திருச்செங்கோடு தீயணைப்பு நிலையத்திற்கும், குடோன் உரிமையாளர் பரமசிவத்திற்கும் தகவல் தெரிவித்தனர்.
விரைந்து வந்த திருச்செங்கோடு தீயணைப்பு நிலைய அலுவலர் கரிகாலன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள், தீயை அணைக்க முயன்றனர். ஆனால், தீ கட்டுக்கடங்காமல் கொழுந்துவிட்டு எரிந்து கொண்டிருந்தது. இதையடுத்து, வெப்படை, குமாரபாளையம் தீயணைப்பு நிலைய வீரர்கள் உதவிக்கு வரவழைக்கப்பட்டனர். மேலும், திருச்செங்கோடு நகராட்சி மற்றும் தனியார் தண்ணீர் லாரிகள் மூலம் தண்ணீர் கொண்டுவரப்பட்டு தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். தொடர்ந்து, 10 மணி நேரத்துக்கும் மேல் போராடி, தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
இருப்பினும், இந்த தீ விபத்தில், குடோனில் வைக்கப்பட்டிருந்த, மூன்று கோடி ரூபாய் மதிப்பிலான சாக்கு பைகள் முற்றிலும் எரிந்து சாம்பலாகின. நாமக்கல் மாவட்ட தீயணைப்பு அலுவலர் செந்தில்குமார், சம்பவ இடத்தை பார்வையிட்டார். திருச்செங்கோடு போலீசார் விசாரித்து வருகின்றனர். இச்சம்பவம், சந்தைப்பேட்டை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.