/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
விமானத்தில் வந்த குழந்தைகளை வரவேற்ற கலெக்டர்
/
விமானத்தில் வந்த குழந்தைகளை வரவேற்ற கலெக்டர்
ADDED : நவ 15, 2024 07:01 AM
சேலம்: குழந்தைகள் தினத்தையொட்டி, 'ரெயின் ட்ராப்ஸ்' எனும் சமூக அமைப்பு சார்பில், 'வானமே எல்லை' என்ற நிகழ்வில், சென்னையை சேர்ந்த, 30 ஆதரவற்ற குழந்தைகள், மாற்றுத்திறனாளிகள், திருநங்கையர், சென்னையில் இருந்து விமானம் மூலம் சேலத்துக்கு சுற்றுலா அழைத்து வரப்பட்டனர்.
அவர்களை, சேலம் விமான நிலையத்தில், கலெக்டர் பிருந்தாதேவி வரவேற்றார். மேட்டூர் சப் - கலெக்டர் பொண்மணி, துணை கலெக்டர் மாருதி பிரியா, ரெயின் ட்ராப்ஸ் நிறுவனர் அரவிந்த் ஜெயபால் உள்பட பலர் பங்கேற்றனர். தொடர்ந்து குழந்தைகள் ஏற்காடு அழைத்து செல்லப்பட்டு, இரவு தங்கி படகு இல்லம், சேர்வராயன் பாயின்ட் உள்ளிட்ட பல்வேறு இடங்களை சுற்றிப்பார்த்து விட்டு இன்று ரயில் மூலம் சென்னை திரும்ப உள்ளனர்.
சேலம், அழகாபுரத்தில் குழந்தைகள் தின விழா, துாரிகை கலை இலக்கிய விழா நேற்று நடந்தது. கலெக்டர் பிருந்தாதேவி தலைமை வகித்தார். இதில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலக கட்டுப்பாட்டில் உள்ள, 27 குழந்தை பராமரிப்பு நிறுவனங்களில், 1,200 குழந்தைகளுக்கு துாரிகை கலை இலக்கிய விழா நடத்தப்பட்டது. பேச்சு, கட்டுரை, மெகந்தி, ஓவியம், நடனம், மாறுவேடம் உள்ளிட்ட போட்டிகள் நடத்தி, வெற்றி பெற்றவர்களுக்கு பாராட்டு சான்றிதழ்களை கலெக்டர் வழங்கினார்.
முன்னதாக கலெக்டர் அலுவலகத்தில், குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு ஊர்வலத்தை, கலெக்டர் பிருந்தாதேவி கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதில் கல்லுாரி மாணவ, மாணவியர், அங்கன்வாடி பணியாளர்கள் உள்பட, 800-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி பணி திட்ட அலுவலர் சுகந்தி, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் ஸ்ரீமுரளி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
உறுதிமொழி ஏற்பு
ஆட்டையாம்பட்டி (கிழக்கு) ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில், முன்னாள் பிரதமர் நேரு படத்துக்கு மலர்துாவி மரியாதை செலுத்தப்பட்டது. தொடர்ந்து மாணவர்கள் தேசபக்தி பாடலுக்கு நடனம் ஆடினர். பெண் கல்வியின் அவசியம் குறித்து விழிப்புணர்வு நாடகம், போட்டிகள் நடத்தி பரிசுகள் வழங்கப்பட்டன.இதையடுத்து மாணவர்கள், ஆசிரியர்கள், 'குழந்தைகளுக்கு எதிரான பிரச்னைகள் குறித்து என் கவனத்துக்கு வந்தால் உடனே, 1098 அல்லது 181 என்ற அவசர உதவி தொலைபேசி எண்களில் தொடர்பு கொண்டு குழந்தைகள் பாதுகாப்பை உறுதி செய்வேன்' என, உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.

