/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
'பேராசிரியர், ஆராய்ச்சியாளர் இணைந்து உழைத்தால் மட்டுமே பிரச்னைக்கு தீர்வு'
/
'பேராசிரியர், ஆராய்ச்சியாளர் இணைந்து உழைத்தால் மட்டுமே பிரச்னைக்கு தீர்வு'
'பேராசிரியர், ஆராய்ச்சியாளர் இணைந்து உழைத்தால் மட்டுமே பிரச்னைக்கு தீர்வு'
'பேராசிரியர், ஆராய்ச்சியாளர் இணைந்து உழைத்தால் மட்டுமே பிரச்னைக்கு தீர்வு'
ADDED : பிப் 15, 2024 10:16 AM
ஓமலுார்: ''அனைத்து துறை பேராசிரியர்கள், அறிவியல் ஆராய்ச்சியாளர்கள் ஒன்றிணைந்து சமுதாயத்துக்கு உழைத்தால் மட்டுமே, பிரச்னைகளுக்கு உரிய தீர்வு உடனே கிடைக்கும்,'' என, திருவாரூர் மத்திய பல்கலை துணைவேந்தர் கிருஷ்ணன் பேசினார்.
சேலம் பெரியார் பல்கலையில், வேதியியல் துறை சார்பில், 'உயிரியல் பயன்பாட்டிற்கான மேம்பட்ட உயிரி பொருட்கள்' தலைப்பில், 3 நாள் சர்வதேச கருத்தரங்கம் நேற்று தொடங்கியது. அதை தொடங்கி வைத்து, திருவாரூர் மத்திய பல்கலை துணைவேந்தர் கிருஷ்ணன் பேசியதாவது:
கடந்த, 45 ஆண்டுகளாக, எச்.ஐ.வி.,க்கு மருந்து கண்டுபிடிக்க முடியவில்லை. ஆனால் கொரோனா தொற்றுக்கு மருந்து உடனே கண்டுபிடிக்கப்பட்டு மக்களுக்கு வழங்கப்பட்டது. இதற்கு அறிவியல் துறைகள் ஒருங்கிணைந்து செயல்பட்டதே காரணம். எதிர்காலத்தில் தனித்து எந்த துறையும் சாதிக்க முடியாது. அனைத்து துறை பேராசிரியர்களும், அறிவியல் ஆராய்ச்சியாளர்களும் ஒன்றிணைந்து சமுதாயத்துக்கு உழைத்தால் மட்டுமே பிரச்னைகளுக்கு உரிய தீர்வு உடனே கிடைக்கும்.
இந்தியாவில், 1,300 பல்கலை, 45,000 கல்லுாரி, 2,000க்கும் மேற்பட்ட ஆராய்ச்சி மையங்கள் உள்ளன. கடந்த ஓராண்டில் மட்டும் இந்தியா சார்பில் சர்வதேச அரங்கில், 40,000 ஆராய்ச்சி கட்டுரைகள் வெளியிடப்பட்டுள்ளன. எனினும் நோபல் பரிசு பெறும் ஆளுமை உருவாகவில்லை. இதற்குரிய காரணத்தை கண்டறிய வேண்டும். 10 ஆண்டுகளுக்கு முன், 4,000 கண்டுபிடிப்புக்கு மட்டும் காப்புரிமை பெறப்பட்டிருந்தது. மத்திய அரசின் நடவடிக்கையால், 10 ஆண்டுகளில், 40,000 கண்டுபிடிப்புகளுக்கு காப்புரிமை பெறப்பட்டுள்ளது.
இதயக்கோளாறுக்கு அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்படும் நோயாளிகள், அடுத்த அரை மணி நேரத்தில் இயல்பு நிலைக்கு திரும்பும் அளவு மருத்துவம் வளர்ந்துள்ளது. இந்தியாவில், 8 பேரில் ஒருவருக்கு சர்க்கரை நோய் உள்ள நிலையில் இப்பிரச்னைக்கு உரிய தீர்வை, இளம் ஆய்வாளர்கள் கண்டறிய வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
பல்கேரிய மருத்துவ பல்கலை பேராசிரியர் ஐரீனா கொஸ்தவா, தென் கொரியா சியோல் தேசிய பல்கலை நாதனியல் ஹாங் உள்ளிட்ட ஆராய்ச்சியாளர்கள், இந்தியா முழுதும் பல்வேறு பல்கலைகளில் இருந்து, 100க்கும் மேற்பட்ட ஆராய்ச்சியாளர்கள் பங்கேற்றனர்.

