/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
ஏற்காட்டில் குவிந்த சுற்றுலா பயணியர் மலைப்பாதையில் நெரிசலால் அவதி
/
ஏற்காட்டில் குவிந்த சுற்றுலா பயணியர் மலைப்பாதையில் நெரிசலால் அவதி
ஏற்காட்டில் குவிந்த சுற்றுலா பயணியர் மலைப்பாதையில் நெரிசலால் அவதி
ஏற்காட்டில் குவிந்த சுற்றுலா பயணியர் மலைப்பாதையில் நெரிசலால் அவதி
ADDED : ஜன 01, 2024 10:49 AM
ஏற்காடு: ஆங்கில புத்தாண்டை கொண்டாட, ஏற்காட்டுக்கு ஏராளமானோர் கார்களில் படையெடுத்ததால், மலைப்பாதையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
பள்ளிகளுக்கு விடுமுறையால் ஒரு வாரமாக, ஏற்காட்டுக்கு சுற்றுலா பயணியர் வருவது அதிகரித்திருந்தது. இந்நிலையில் ஞாயிறான நேற்று விடுமுறை நாள் என்பதோடு, இன்று ஆங்கில புத்தாண்டை கொண்டாட, ஏராளமான சுற்றுலா பயணியர் ஏற்காட்டுக்கு படையெடுத்தனர். இதனால் அங்குள்ள அண்ணா, ஏரி, தாவரவியல் பூங்காக்கள், ரோஸ் கார்டன், லேடீஸ், ஜென்ஸ் சீட்டுகள், பக்கோடா பாயின்ட், சேர்வராயன் குகை கோவில் உள்ளிட்ட இடங்களில் சுற்றுலா பயணியர் கூட்டம் அலைமோதியது.
குறிப்பாக படகு இல்லம் முழுதும் சுற்றுலா பயணியர் குவிந்தனர்.
அங்கும் கூட்ட நெரிசல் இருந்தது. சவாரி செய்ய பயண சீட்டு வாங்க, நீண்ட வரிசையில் காத்திருந்தனர். தொடர்ந்து சீட்டு வாங்கிய பின்பும் வெகுநேரம் காத்திருந்து சவாரி செய்து மகிழ்ந்தனர்.
சுற்றுலா பயணியர், பைக், கார்களில் அதிகளவில் வந்தனர். இதனால் ஏற்காடு மலைப்பாதை மட்டுமின்றி அங்குள்ள முக்கிய சாலைகளான ஒண்டிக்கடை ரவுண்டானா, அண்ணா பூங்கா, படகு இல்லம், லேடீஸ் சீட், ரோஜா தோட்டம், பக்கோடா பாயின்ட் உள்ளிட்ட சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் ஊர்ந்தபடியே சுற்றுலா பயணியர் சென்றனர்.
மேலும் ஏற்காட்டை சுற்றிப்பார்த்து விட்டு மாலையில் பலரும் ஒரே நேரத்தில் சேலத்துக்கு புறப்பட்டனர். இதனால் மலைப்பாதையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகன ஓட்டிகள் ஊர்ந்தபடியே சென்றனர்.
இதுபோன்ற நேரங்களில் ஏற்காடு போலீசார், போக்குவரத்தில் மாற்றம் செய்திருந்தால், சுற்றுலா பயணியர் எளிதாக சென்றிருப்பர்.
முன்னதாக ஏற்காடு அடிவாரம் சோதனைச்சாவடி அருகே போலீசார் அனைத்து வாகனங்களையும் நிறுத்தி சோதனை செய்தனர். வெளிமாநில மது பாட்டில், டாஸ்மாக் மதுபாட்டில்களை கண்டு பிடித்து பறிமுதல் செய்தனர்.
அத்துடன் சுற்றுலா பயணியருக்கு புத்தாண்டு கொண்டாட்டங்கள் குறித்து அறிவுரை வழங்கினர். எல்லை மீறினால் கைது நடவடிக்கை எடுக்கப்படும் என, எச்சரித்து அனுப்பினர். மலைப்பாதையில் போக்குவரத்து நெரிசலுக்கு, போலீசார் வாகன தணிக்கையை தீவிரப்படுத்தியதும் ஒரு காரணமாக அமைந்தது.