ADDED : நவ 22, 2026 01:19 AM
சேலம்: கார்த்திகையில் வரும் ஏகாதசியை, கைசிக ஏகாதசி என்பர். அதற்கு மறுநாள் துவாதசியை, கைசிக துவாதசி என்பர். அதை ஒட்டி வடமாநிலங்களில் உத்தான துவாதசி அல்லது துளசி துவாதசி என குறிப்பிட்டு, துளசி திருமணம் நடத்தப்படும்.
அதன்படி சேலம், செவ்வாய்ப்பேட்டை பாண்டுரங்கநாதர் கோவிலில், நேற்று முன்தினம் பாண்டுரங்கர், 'தெப்ப உற்சவம்' கண்டருளினார். நேற்று கோவில் துளசி மாடத்தில் வளர்த்து வரும் துளசி செடிக்கும், கிருஷ்ணருக்கும் திருக்கல்யாண உற்சவம் நடத்தி வைக்கப்பட்டது.முன்னதாக துளசி செடியை மகாலட்சுமி தாயார் போல் அலங்கரித்து, உற்சவர் கிருஷ்ணரை, அருகே எழுந்தருள செய்தனர். பின் பட்டாச்சாரியார்கள், வேத மந்திரங்கள் முழங்க, யாகம் நடத்தி திருமாங்கல்யத்தை கிருஷ்ணர் கையில் தொட்டு வாங்கி, துளசி செடி ரூபத்தில் அருள்பாலித்த மகாலட்சுமிக்கு அணிவித்து, கல்யாணம் செய்து வைத்தனர். தொடர்ந்து மணமகன் - மணமகள் வீட்டார் போல், பக்தர்கள் இரு குழுவாக பிரிந்து அவர்களுக்குள் நலுங்கு வைத்தல், மடி நிரப்புதல் உள்ளிட்ட சம்பந்தி சடங்குகள் நடத்தப்பட்டன. பின் அனைவருக்கும் துவாதசி விருந்து, மண்டபத்தில்
வழங்கப்பட்டது.
