/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
விஜய் வீடியோவை பார்க்காததால் கருத்து தெரிவிக்க இயலாது: இ.பி.எஸ்.,
/
விஜய் வீடியோவை பார்க்காததால் கருத்து தெரிவிக்க இயலாது: இ.பி.எஸ்.,
விஜய் வீடியோவை பார்க்காததால் கருத்து தெரிவிக்க இயலாது: இ.பி.எஸ்.,
விஜய் வீடியோவை பார்க்காததால் கருத்து தெரிவிக்க இயலாது: இ.பி.எஸ்.,
ADDED : அக் 01, 2025 02:03 AM
இடைப்பாடி;சேலம் மாவட்டம் இடைப்பாடி எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு நிதியில், 2.76 கோடி ரூபாய் மதிப்பில், 31 பணிகள்; ராஜ்யசபா எம்.பி., தொகுதி மேம்பாட்டு நிதி, 2.75 கோடி ரூபாயில், 19 பணிகள் என, 5.52 கோடி ரூபாய் மதிப்பில், முடிவுற்ற, 50 திட்டப்பணிகள் தொடக்க விழா, இடைப்பாடி ஒன்றிய அலுவலகத்தில் நேற்று நடந்தது.
அதில், அத்தொகுதி எம்.எல்.ஏ., இ.பி.எஸ்., முடிவுற்ற திட்டப்பணிகளை தொடங்கி வைத்து, புது திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டி பேசியதாவது: தொகுதி நிதியில் இருந்து மக்கள் கேட்ட மேல்நிலை குடிநீர் தொட்டிகள், கான்கிரீட் சாலைகள், மினி டேங்க், தார்ச்சாலைகள், ரேஷன் கடைகள் ஆகியவற்றை வழங்கியுள்ளேன். இத்தொகுதியில் கூட்டு குடிநீர் திட்டங்கள், தரமான சாலைகள், அரசு கட்டடங்கள் என, மக்களுக்கு தேவையான திட்டங்கள், அடிப்படை வசதிகள் உள்ளிட்ட அனைத்தும் செயல்படுத்தி உள்ளேன். இவ்வாறு அவர் பேசினார்.
அப்போது, த.வெ.க., தலைவர் விஜய் வெளியிட்ட வீடியோ குறித்து நிருபர்கள் கேட்டபோது, ''வீடியோவை பார்க்கவில்லை. அதனால் அதுகுறித்து கருத்து தெரிவிக்க இயலாது. அதேநேரம் இது அரசு நிகழ்ச்சி. இங்கு அரசியல் தொடர்பான கருத்துகளை தெரிவிக்கக்கூடாது,'' என, இ.பி.எஸ்., தெரிவித்தார்.
அ.தி.மு.க.,வை சேர்ந்த, ஒன்றிய குழு முன்னாள் தலைவர்களான, கொங்கணாபுரம் மணி, இடைப்பாடி மாதேஸ், குப்பம்மாள், இடைப்பாடி நகராட்சி முன்னாள் தலைவர் கதிரேசன், அ.தி.மு.க., நகர செயலர் முருகன், ஒன்றிய செயலர்களான கொங்கணாபுரம் ராஜேந்திரன், இடைப்பாடி மாதேஸ்வரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
பின் இடைப்பாடி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில், 3 கோடி ரூபாய் மதிப்பில், மினி மைதானம் கட்டப்பட உள்ள இடத்தை, இ.பி.எஸ்., பார்வையிட்டார். இடைப்பாடி தாசில்தார் வைத்தியலிங்கம், பி.டி.ஓ.,க்கள் ஆரோக்கியநாதன் கென்னடி, செல்வகுமார் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.