ADDED : மார் 25, 2026 06:38 AM
சேலம் மாவட்டத்தில், 11 சட்டசபை தொகுதிகளுக்கு தேவையான மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் மற்றும் வாக்காளர் பதிவு செய்த ஓட்டை சரிபார்க்கும், 'விவிபேட்' கருவிகள் ஆகியவை, கணினி மூலம் குலுக்கல் முறையில் தனித்தனியே ஒதுக்கீடு செய்யும் பணி, கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது.
மாவட்ட தேர்தல் அலுவலர் பிருந்தாதேவி தலைமையில், தேர்தல் பொது பார்வையாளர்கள், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில், தொகுதி வாரியாக ஒதுக்கீடு பணி நடந்தது.
இதுகுறித்து பிருந்தாதேவி கூறியதாவது:
மாவட்டத்தில், 8,030 ஓட்டுப்பதிவு இயந்திரம், 4,490 கட்டுப்பாடு கருவி, 4,861 விவிபேட் கருவிகள் உள்ளன. அதில் ஓட்டுச்சாவடி எண்ணிக்கையில், தலா, 20 சதவீத ஓட்டுப்பதிவு இயந்திரம் மற்றும் கட்டுப்பாடு கருவி; 30 சதவீதம் கூடுதலாக, 'விவிபேட்' கருவிகள் என, தொகுதிகளுக்கு தனித்தனியே ஒதுக்கீடு செய்யப்பட்டு, அதன் முறையே பாதுகாப்பு அறைகளில் வைக்கப்படும். இப்பட்டியல் விபரம், தேர்தல் அலுவலர், உதவி தேர்தல் அலுவலர் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட கட்சியினருக்கு வழங்கியதை போன்று, அடுத்து இறுதி பட்டியல் வெளியானதும், போட்டியிடும் வேட்பாளருக்கும் வழங்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
