sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

சேலம் மாவட்டத்தின் தேவைகள் நிறைவேற்றப்படுமா?

/

சேலம் மாவட்டத்தின் தேவைகள் நிறைவேற்றப்படுமா?

சேலம் மாவட்டத்தின் தேவைகள் நிறைவேற்றப்படுமா?

சேலம் மாவட்டத்தின் தேவைகள் நிறைவேற்றப்படுமா?


ADDED : ஜூன் 12, 2025 01:39 AM

Google News

ADDED : ஜூன் 12, 2025 01:39 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேலம் மாவட்டத்தில் பல்வேறு திட்டங்களை முதல்வர் ஸ்டாலின் நிறைவேற்றினாலும், சேலம் மக்களின் தீர்க்கப்படாத பல்வேறு பிரச்னைகள் தொடர்கின்றன. அப்பிரச்னைகளை தீர்க்க முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல்வேறு தரப்பினரும் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். அதன் விபரம்:

பல ஆண்டு கனவு 'ரிங் ரோடு'

பெங்களூரு, மதுரை, கோவை, சென்னை உள்பட, பல முக்கிய நகரங்களை இணைக்கும் சேலத்தில், 'ரிங் ரோடு' என்பது, 15 ஆண்டு கனவாக உள்ளது. இதற்கு அரசு தரப்பில் ஆய்வு மட்டும் நடந்தது. இதுகுறித்து கடந்த மாதம் சட்டசபையில் பேசிய, பொதுப்பணித்துறை அமைச்சர் வேலு, காமலாபுரம் விமான நிலையம் முதல் தாரமங்கலம், இளம்பிள்ளை, காகாபாளையம், வெண்ணந்துார் வழியே மல்லுாரில் இணைக்கும்படியும், ஏற்காடு அடிவாரம் வழியே, மின்னாம்பள்ளியில் இணைக்கும்படியும், 'ரிங் ரோடு' அமைக்க, அறிக்கை தயாரிக்கும் பணி நடப்பதாக தெரிவித்தார். சீலநாயக்கன்பட்டி பைபாஸ் முதல் ஓமலுார் வரை தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் செல்வதோடு, 4 வழிச்சாலையாக இருந்தபோதும் ஊர்ந்து செல்ல வேண்டியுள்ளது. பல நேரங்களில் நெரிசல் ஏற்படுகிறது. அதனால் முதல்வர், கூடுதல் முக்கியத்துவம் அளித்து, 'ரிங் ரோடு'க்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வேளாண் கல்லுாரி கிடைக்குமா...

சேலம் மாவட்டத்தில், 30 சதவீத மக்கள், விவசாயம், அதுசார்ந்த தொழில்களை, வாழ்வாதாரமாக வைத்துள்ளனர். விவசாயமே, மாவட்ட பொருளாதாரத்தின் மிக முக்கிய பிரிவு. இங்குள்ள மொத்த பரப்பளவான, 5.20 லட்சம் ஹெக்டேரில், 2.20 லட்சம் ஹெக்டேர், சாகுபடி பரப்பாக உள்ளது. வேளாண் உற்பத்தியில் சேலம், முன்னோடி மாவட்டங்களுள் ஒன்றாக உள்ளதால், வேளாண் படிப்புகளை மேற்கொள்ள விரும்பும் மாணவ, மாணவியர், வெளிமாவட்டங்களுக்கு செல்ல வேண்டிய கட்டாயம் உள்ளது. அதனால் தமிழக அரசு, சேலம் மாவட்டத்தில் வேளாண் கல்லுாரி அமைத்து, விவசாயம் சார்ந்த படிப்புகள், ஆராய்ச்சிகளை மேற்கொள்வது அவசியம்.

லாரி ஸ்டாண்ட் கட்டாய தேவை

சேலம் மாவட்டத்தில் இருந்து, நாடு முழுதும், 40,000க்கும் மேற்பட்ட லாரிகள் இயக்கப்படுகின்றன. குறிப்பாக ஜவ்வரிசி, இரும்பு தளவாடங்கள், கல் மாவு, துணி வகைகள் அதிகமாக வடமாநிலங்களுக்கும், அங்கிருந்து வெங்காயம், பூண்டு, பருப்பு, மளிகை பொருட்கள், சேலம் மாவட்டத்துக்கும் லாரிகள் மூலம் கொண்டு வரப்படுகின்றன. ஆனால் லாரிகளை நிறுத்த, சேலத்தில் போதிய இடவசதி இல்லை. சாலையோரம், செவ்வாய்ப்பேட்டை, லீபஜார் உள்ளிட்ட நெரிசல் நிறைந்த இடங்களில் ஆங்காங்கே நிறுத்தப்படுகின்றன. 2007ல், ஜாகீர் அம்மாபாளையம் அருகே, 15 ஏக்கரில், லாரி மார்க்கெட் அமைக்க ஆய்வு செய்யப்பட்டதோடு சரி. லாரி மார்க்கெட் அமைத்தால், உள்ளாட்சி அமைப்புகளுக்கு வருவாய் ஏற்பட்டு, லாரி தொழிலும் மேலும் வளர வழிவகுக்கும்.

ஏற்காட்டில் அரசு கல்லுாரி அவசியம்

ஏற்காடு மலைப்பகுதியில் மஞ்சக்குட்டை, மாரமங்கலம், நாகலுார், செம்மநத்தம், தலைச்சோலை, வாழவந்தி, வெள்ளக்கடை உள்ளிட்ட பல்வேறு மலைக்கிராமங்கள் உள்ளன. அவர்களின் குழந்தைகள், பள்ளி கல்விக்கே, பல கி.மீ., பயணித்து ஏற்காடு வர வேண்டியுள்ளது. பழங்குடி மக்கள் அதிகம் வாழும் அப்பகுதிகளில், கல்லுாரி கிடையாது. உயர்கல்வி செல்ல விரும்பும் மாணவ, மாணவியர், சேலம் வர வேண்டும். இதற்கு தினமும் பல மணி நேரம் பயணிக்க வேண்டும். சிலர் வேறு மாவட்டங்களில், விடுதிகளில் தங்கி படிக்க வேண்டியுள்ளது. இதற்கு செலவு செய்ய கூட, பொருளாதார வசதி குறைவாக உள்ளதால், மலைப்பகுதியில் வசிப்போரின் உயர்கல்வி சதவீதமும் குறைவாக உள்ளது. இதை மீட்டெடுக்க, பழங்குடி மக்களுக்கு உயர்கல்வியை கொடுக்க, ஏற்காட்டில் அரசு கலைக்கல்லுாரி மிகவும் அவசியம்.

சர்வதேச நுாலகம் எப்போது...

இன்றும் போட்டித்தேர்வுக்கு தயாராகும் மாணவ, மாணவியர், 'தேடல்' உள்ள ஆராய்ச்சியாளர்களின் புகலிடமாக நுாலகம் உள்ளது. மதுரையில், 114 கோடி ரூபாய் மதிப்பில், பிரமாண்ட முறையில் சர்வதேச நுாலகம், 2023ல் பயன்பாட்டுக்கு வந்தது. 5 லட்சம் புத்தகங்களுடன், 6 தளங்களில் உள்ளது. இது, தேடல் உள்ள பலருக்கும், கனவு இடமாக மாறியுள்ளது. சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி என, பின்தங்கிய மக்கள் அதிகம் வசிக்கும் இந்த மண்டலத்திலும், சர்வதேச நுாலகம் அமைக்க வேண்டும் என்பது, அறிஞர்களின் கோரிக்கை. சேலத்தில் பிரமாண்ட நுாலகம் அமைத்து, இம்மண்டல மாணவ, மாணவியருக்கு உதவ வேண்டும்.

'பஸ்போர்ட்' அமைக்க முன்வருமா அரசு

சேலம் மாநகரில் போக்குவரத்து நெரிசலை குறைக்க, 2019ல், மாமாங்கம் அருகே, ஐ.டி., பார்க்கை அடுத்து, 62 ஏக்கரில், அதிநவீன பஸ்போர்ட் அமைக்க, முதல்கட்ட பணி நடந்த நிலையில், ஆட்சி மாறியதால் அத்திட்டம் கனவானது. சேலத்தில், நகரின் மையப்பகுதியில் உள்ள புது பஸ் ஸ்டாண்ட் மட்டுமே பிரதான பஸ் ஸ்டாண்ட். ஆம்னி பஸ்கள், அரசு, தனியார் பஸ்கள் என, எப்போதும் நெரிசல் அதிகமுள்ளது. விடுமுறை நாட்களில் கூட்டம் அலைமோதுவதால், சேலம் நகர முக்கிய சாலைகளில் ஊர்ந்தபடி செல்லும் நிலை தொடர்கிறது. இதை தடுக்க, பஸ்போர்ட் அமைக்காவிட்டாலும், மாமாங்கம், கொண்டலாம்பட்டி, அயோத்தியாப்பட்டணம் பகுதிகளில், புறநகர் பஸ் ஸ்டாண்டுகளை அமைக்க, அரசு முன்வர வேண்டும்.

பனமரத்துப்பட்டி ஏரிக்கு உயிர்

கொடுப்பாரா...

ஜருகுமலை அடிவாரத்தில், 2,137 ஏக்கரில், பனமரத்துப்பட்டி ஏரி உள்ளது. சேலம் மாநகரம், ராசிபுரம், மல்லுார் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு குடிநீர் ஆதாரமாக விளங்கியது ஒரு காலம். ஏராளமான திரைப்படங்களும் எடுக்கப்பட்டு சுற்றுலாத்தலமாக இருந்தது. பின் ஆக்கிரமிப்பால் நீர்வரத்து குறைந்து, சீமைக்கருவேல மரங்களால் புதர்மண்டியுள்ளது. இதை துார்வாரி, காவிரி உபரிநீரை நிரப்பினால், சுற்றுவட்டார பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து, குடிநீர் தேவையும் பூர்த்தியாகும். ஆனால் பல ஆண்டாக பல்வேறு அதிகாரிகள், அமைச்சர்கள் ஆய்வு செய்தபோதும் பலனில்லை. ஏரிக்கு, முதல்வர்தான் உயிர் கொடுக்க வேண்டும்.






      Dinamalar
      Follow us