/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
நவராத்திரி விழாவையொட்டி கொலு வைத்து வழிபாடு
/
நவராத்திரி விழாவையொட்டி கொலு வைத்து வழிபாடு
ADDED : செப் 23, 2025 01:32 AM
சேலம், துர்க்கா, லட்சுமி, சரஸ்வதி ஆகிய முப்பெரும் தேவியர்களை கொண்டாடும் வகையில், ஆண்டுதோறும் புரட்டாசி மாத அமாவாசைக்கு மறுநாள் துவங்கி, ஆயுதபூஜை வரை நவராத்திரி திருவிழா நடக்கும்.
நடப்பாண்டு நவராத்திரி விழா நேற்று துவங்கியதை தொடர்ந்து, சேலம் நெத்திமேடு தண்ணீர்பந்தல் காளியம்மன் கோவிலில், ஆயிரக்கணக்கான பொம்மைகளை கொண்டு கருவறையை சுற்றிலும் அழகாக அடுக்கி கொலு அமைத்துள்ளனர்.
இதே போல் நகரில் பல்வேறு கோவில்களிலும், பெரும்பாலான வீடுகளிலும் அவரவர் வசதிக்கேற்ப, 5,7,9 படிகள் அமைத்து முதல் படியில் கலசம் அமைத்து, ஓர் அறிவு உயிரினங்கள், இரண்டாம் படியில் இரண்டு அறிவு உயிரினங்கள் என வரிசையாக ஆறு அறிவு மனிதன் வரை அனைத்து உயிரினங்கள் மற்றும் கடவுள் அவதார பொம்மைகளை கொண்டு கொலு வைத்துள்ளனர்.
நவராத்திரியின் முதல் மூன்று நாட்கள் துர்க்கை வழிபாடு, அடுத்த மூன்று நாட்கள் லட்சுமிக்கும் அடுத்த மூன்று நாட்கள் சரஸ்வதிக்கும் வழிபாடு நடக்கும். 10ம் நாள் ஆயுத பூஜையுடன் விழா நிறைவு பெறும். நடப்பாண்டு அக்.,1ல் ஆயுதபூஜை, 2ல் விஜயதசமி வருகிறது. அன்றைய தினம் முதல் முதலாக கல்வி கற்கும் குழந்தைகளுக்கு 'வித்யாரம்பம்' செய்தால் அனைத்து கலைகளும் கைவசப்படும் என்பது நம்பிக்கை.
* தம்மம்பட்டி, காசிவிசாலாட்சி உடனுறை காசிவிஸ்வநாதர் கோவிலில் உள்ள திருமண மண்டபத்தில், பொதுமக்கள் கொண்டு வந்த கொலு பொம்மைகள் வைக்கப்பட்டு, அலங்காரம் செய்து, பூஜை தொடங்கியது. தொடர்ந்து அம்மன் பாடல்களை பெண்கள் பாடினர்.
* தாரமங்கலம் கண்ணனுார் மாரியம்மன் கோவிலில், நவராத்திரி விழாவை முன்னிட்டு, அம்மனுக்கு அபிஷேகம் மற்றும் அலங்காரம் செய்து தீபாராதனை காட்டப்பட்டது. மாலை 4:30 மணிக்கு உற்சவர் அம்மனுக்கு முத்தங்கி அலங்காரம் செய்யப்பட்டது. நவராத்திரி விழாவின் ஒன்பது நாட்களும் காலை, மாலை என அம்மனுக்கு சிறப்பு பூஜை நடைபெறும்.
* சங்ககிரி, வி.என்.பாளையத்தில் வஸந்தவல்லப ராஜபெருமாள் கோவில் வளாகத்தில் உள்ள, தபால் ஆஞ்சநேயர் சன்னதியில், 500க்கும் மேற்பட்ட பொம்மைகளுடன் கொலு விழா ஆரம்பமானது.
* ஆத்துார், கோட்டை சம்போடை வனம் பகுதியில், மதுரகாளியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் நேற்று, இரண்டாம் நாள் நவராத்திரி பூஜை நடந்தது.
அப்போது, மூலவர் மதுரகாளியம்மன் ராஜராஜேஸ்வரி அலங்காரத்தில் அருள்பாலித்தார். தொடர்ந்து, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர்.