UPDATED : நவ 28, 2026 12:00 AM
ADDED : நவ 27, 2026 11:48 PM
ஆத்துார்: சேலம் மாவட்டம், ஆத்துார், நகராட்சி பூங்கா அருகே கூட்டுறவு தொடக்க வங்கி உள்ளது. அதன் காவலாளியாக, கல்லாநத்தத்தை சேர்ந்த முத்துசாமி, 59, பணிபுரிகிறார். நேற்று அதிகாலை, 2:30 மணிக்கு, பணியில் இருந்த முத்துசாமியை, மர்ம நபர், கல்லால் தாக்கியுள்ளார். அவர் கூச்சலிட்டதும், அந்த நபர் ஓடிவிட்டார்.
தொடர்ந்து, ஆத்துார், நான்கு முனை சந்திப்பில் உள்ள தனியார் மொபைல் கடை காவலாளியான, தென்னம்பிள்ளையூரை சேர்ந்த ராஜா, 65, என்பவரையும் தாக்கி தப்பினார். ஆத்துார் போலீசார் விசாரித்தனர்.
அதில், காவலாளிகளை தாக்கியது, புதுக்கோட்டை மாவட்டம், காடம்பட்டியை சேர்ந்த ராஜேஷ்குமார், 36, என்பதும், தற்போது, அவர் நாமக்கல் பஸ் ஸ்டாண்டில் இருப்பதும் தெரிந்தது. இதையடுத்து, போலீசார், அங்கு சென்று, ராஜேஷ்குமாரை, கைது செய்தனர்.
போலீசார் கூறுகையில், ‘ராஜேஷ்குமார், மன நலம் பாதித்தவராக தெரிகிறார். விசாரிக்கிறோம்’ என்றனர்.
