/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
சிங்கம்புணரியில் 50 பள்ளிகள் மூடல் ஆர்ப்பாட்டத்திற்கு சென்ற ஆசிரியர்கள்
/
சிங்கம்புணரியில் 50 பள்ளிகள் மூடல் ஆர்ப்பாட்டத்திற்கு சென்ற ஆசிரியர்கள்
சிங்கம்புணரியில் 50 பள்ளிகள் மூடல் ஆர்ப்பாட்டத்திற்கு சென்ற ஆசிரியர்கள்
சிங்கம்புணரியில் 50 பள்ளிகள் மூடல் ஆர்ப்பாட்டத்திற்கு சென்ற ஆசிரியர்கள்
ADDED : ஆக 01, 2024 04:44 AM

சிங்கம்புணரி: சென்னை ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க ஆசிரியர்கள் சென்றதால் சிங்கம்புணரியில் 50 பள்ளிகள் நேற்று மூடப்பட்டு மாணவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பினர்.
தொடக்கக்கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழுவான டிட்டோஜாக் சார்பில் 31 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை தொடக்கக்கல்வி இயக்குநர் அலுவலக முற்றுகை போராட்டம் நடந்தது.
இதில் சிவகங்கை மாவட்ட ஆசிரியர்கள் நேற்று பங்கேற்றனர். சிங்கம்புணரி ஒன்றியத்தில் 200க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் இந்த போராட்டத்தில் பங்கேற்றனர். இதனால் இவ்வொன்றியத்தில் மொத்தமுள்ள 67 தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் 50 பள்ளிகளில் ஆசிரியர்கள் பணிக்கு வராததால் மூடி கிடந்தது.
பள்ளிக்கு வந்த மாணவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பினர். ஒரு சில பள்ளிகளை மட்டும் தற்காலிக ஆசிரியர்களை கொண்டு திறந்து வைத்திருந்தனர்.
இது குறித்து தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில செயற்குழு உறுப்பினர் முத்துப்பாண்டியன் கூறியதாவது, தொடக்க கல்வி துறையில் 60 ஆண்டாக நடைமுறையில் இருந்த ஒன்றிய அளவிலான பணி மூப்பை அரசாணை 243 மூலம் மாநில அளவிலான சீனியாரிட்டியாக கல்வித்துறை மாற்றியுள்ளது.
இது 90 சதவீத ஆசிரியர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். குறிப்பாக பெண் ஆசிரியர்களின் பதவி உயர்வு வாய்ப்பை பறிக்கும் விதமாக உள்ளது.
தி.மு.க. அரசு தனது தேர்தல் அறிக்கையில் தெரிவித்த பழைய பென்ஷன் திட்டம் உள்ளிட்ட 31 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டத்தை நடத்தி வருகிறோம். இந்த அரசு அமைந்த பின்பு எங்கள் கோரிக்கைகளை நிறைவேற்ற மறுத்து வருகிறது.
இது குறித்து ஏற்கனவே பலகட்ட போராட்டங்களை நடத்தி முடித்து உள்ளோம். பள்ளிக்கல்வி துறை அமைச்சர் ஒத்துக் கொண்ட கோரிக்கைகளுக்கு கூட இதுவரை ஆணை பிறப்பிக்கவில்லை.
வேறு வழியின்றி உச்சபட்ச போராட்டத்தை நடத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. இருந்தாலும் எங்கள் மாணவர்கள் மீது எங்களுக்கு அக்கறை உள்ளது. பள்ளிக்கு திரும்பிய பிறகு கூடுதல் வகுப்பு மூலம் அவர்களது கற்றல் இழப்பை ஈடு செய்வோம். தமிழ்நாடு அரசு எங்கள் நிர்வாகிகளை அழைத்து பேசாமல் காவல்துறையை ஏவிவிட்டு கைது செய்வதை கண்டிக்கிறோம், என அவர் தெரிவித்தார்.
வட்டாரக் கல்வி அலுவலர் கலைச்செல்வி கூறுகையில், ஆசிரியர்கள் வராததால் தற்காலிக ஆசிரியர்களை கொண்டும் பணி மாறுதல் பெற்று வந்த மற்ற ஆசிரியர்களை கொண்டும் 30 சதவீத பள்ளிகளை திறந்தோம், என்றார்.