ADDED : மே 16, 2024 06:48 AM

திருப்புத்துார் : திருப்புத்துார் நகரில் பரவலாக வெளியூர் பயணிகளுக்கு உதவ வைக்கப்பட்டுள்ள சுற்றுலா தகவல் பலகைகள் பொலிவிழந்து பயனற்று உள்ளன.
திருப்புத்துார் நகரின் எல்லைகள் மற்றும் முக்கிய இடங்களில் பரவலாக நெடுஞ்சாலைத்துறை, பேரூராட்சி, சுற்றுலாத்துறை சார்பில் சுற்றுலா தகவல் மற்றும் வரைபடத்துடன் தகவல் பலகைகள் வைக்கப்பட்டுள்ளது.
திருப்புத்துார் வரும் பயணிகள் அருகிலுள்ள சுற்றுலாத் தலங்கள் குறித்த விபரத்துடன், அதற்கான வழி மற்றும் தூரம் குறித்து தெரிந்து கொள்ள இந்த பலகைகள் உதவின. இந்த தகவல் பலகைகள் வைக்கப்பட்டு பல வருடங்களாகி விட்டன. தற்போது இந்த தகவல் பலகையில் எழுத்துக்கள் மறைந்து எந்த தகவலும் பயணிகளுக்கு தெரியாத வகையில் பொலிவிழந்து காணப்படுகிறது.
இதனால் வாகனங்களில் வரும் வெளியூர் பயணிகள் இப்பகுதி ஆன்மிக, வரலாறு, இயற்கை சுற்றுலாத் தலங்கள் குறித்து தெரிவதில்லை. தகவல் மற்றும் அழகிய படங்களுடன் சுற்றுலாத் தகவல் பலகையை புதுப்பித்து மீண்டும் கூடுதலான இடங்களில் பொருத்தினால் பயணிகளுக்கு உதவிகரமாக இருக்கும்.