/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
மடப்புரம் காளி கோயிலுக்கு கூடுதல் டவுன் பஸ்கள்
/
மடப்புரம் காளி கோயிலுக்கு கூடுதல் டவுன் பஸ்கள்
ADDED : ஜூலை 18, 2024 06:22 AM
திருப்புவனம், : மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலுக்கு ஆடி வெள்ளி போன்ற நாட்களில் கூடுதல் பஸ்களை இயக்க போக்குவரத்து கழகங்கள் திட்டமிட்டுள்ளன.
பிரசித்தி பெற்ற காளி கோயில்களில் மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலும் ஒன்று.இங்கு ஆடி வெள்ளியன்று பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் வந்து தரிசனம் செய்வது வழக்கம், அரசு போக்குவரத்து கழகம், மதுரை கோட்டம் சார்பில் ஆடி வெள்ளிக்கு சிறப்பு பேருந்து இயக்கப்படுவது வழக்கம், இந்தாண்டு அதிகளவு பக்தர்கள் வர வாய்ப்புள்ளதால் தொடர்ச்சியாக பேருந்துகளை இயக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.
சிவகங்கை மாவட்டத்தில் திருப்புவனம் இருந்தாலும் மதுரை கோட்டத்தில் இருந்து தான் நகரப்பேருந்துகள் அதிகளவில் இயக்கப்படுகின்றன. தற்போது தினசரி குறைந்த அளவே பேருந்துகள் இயக்கப்படுவதால் பள்ளி, கல்லுாரி செல்ல முடியாமல் மாணவர்கள் சிரமப்படுகின்றனர். படிகளில் தொங்கியவாறு பயணம் செய்ய வேண்டியுள்ளது.
இதனை தவிர்க்க தினசரி காலை மற்றும் மாலை நேரங்களில் கூடுதல் பேருந்துகள் இயக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்திருந்தனர். இதற்கு பதிலளித்த மதுரை கோட்ட நிர்வாகம் திருப்புவனம் கிளை பணிமனை மூலம் 30 நகரப்பேருந்துகள் இயக்கப்பட்டு வருவதாகவும் பயணிகளின் கோரிக்கை படி கூடுதல் பேருந்து இயக்கப்படும் என்றும் ஆடி வெள்ளி போன்ற விசேஷ தினங்களில் மடப்புரம் கோயிலுக்கும் கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளனர்.