
சரண்டர் விடுப்பு கிடைக்குமா
ஏ.தமிழரசன், மாநில துணை தலைவர், தமிழ்நாடு வருவாய்துறை அலுவலர் சங்கம்: இந்த பட்ஜெட் 12 லட்சம் அரசு ஊழியர், ஆசிரியர்களுக்கு ஏமாற்றம் தந்துள்ளது. முதல்வர் ஸ்டாலின் எதிர்கட்சி தலைவராக இருந்தபோது, எங்கள் போராட்டத்தில் பங்கேற்று, நான் ஆட்சிக்கு வந்தால் நிறைவேற்றுவேன் என்றார். 4 ஆண்டாக அரசு ஊழியர், ஆசிரியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றவே இல்லை. நேற்றைய பட்ஜெட் இந்த அரசின் கடைசியும், முழுமையானதுமான பட்ஜெட்.
பழைய பென்ஷன் திட்டம் அறிவிப்பு வரும் என எதிர்பார்த்து ஏமாற்றம் அடைந்தோம். கருணை அடிப்படை பணி நியமனம், 21 மாத கால சம்பள நிலுவை குறித்த அறிவிப்பு இல்லை. சரண்டர் விடுப்பு சம்பளம் 2026 ஏப்., 1 முதல் வழங்கப்படும் என அறிவித்தது, அடுத்த நிதி ஆண்டிற்கான பட்ஜெட்டாக தான் பார்க்கிறோம். அன்றைய தினம் தேர்தல் நடத்தை விதி அமலில் இருக்கும் போது, எப்படி சரண்டர் விடுப்பு அறிவிப்பை செயல்படுத்த முடியும். எனவே எங்களுக்கு இந்த அரசின் மீது நம்பிக்கை ஏற்பட 110 விதியில் சரண்டர் விடுப்பை வெளியிட வேண்டும்.
ஆசிரியர்களுக்கு அதிருப்தி பட்ஜெட்
ஏ.முத்துப்பாண்டியன், மாநில செயற்குழு உறுப்பினர், தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி: பட்ஜெட்டில் கல்வித்துறைக்கு ரூ.46,767 கோடி ஒதுக்கியதை வரவேற்கிறோம். அதே போன்று திறன்மிகு வகுப்பறை, ஆசிரியர்கள் நியமனம், காலை உணவு திட்டம் விரிவாக்கம், அரசு பள்ளி உட்கட்டமைப்பை மேம்படுத்துதல் உள்ளிட்ட திட்டங்களை அறிவித்ததில் வரவேற்கிறோம். அரசு ஊழியர், ஆசிரியர்கள் எதிர்பார்த்த பட்ஜெட்டாக இல்லை.
ஜாக்டோ ஜியோ நிர்வாகிகளுக்கு நம்பிக்கை அளித்த முதல்வர் ஸ்டாலின், பட்ஜெட்டில் ஏமாற்றத்தை தந்துள்ளார். பழைய பென்ஷன் திட்டம் உட்பட நியாயமான கோரிக்கைகள் மீது பட்ஜெட்டில் அறிவிப்பு இல்லாதது, அரசு ஊழியர், ஆசிரியர்களுக்கு அதிருப்தி அளிக்கும் பட்ஜெட் தான். இருப்பினும் வரும் பட்ஜெட் மானிய கோரிக்கையில் முதல்வர் எங்கள் கோரிக்கையை நிறைவேற்றுவார் என நம்புகிறோம்.
போராட்ட களமாகும் தமிழகம்
பி.பாண்டி, மாநில செயலாளர், தமிழ்நாடு சத்துணவு, அங்கன்வாடி ஓய்வூதியர் சங்கம்: அரசின் கடைசி பட்ஜெட் கூட அங்கன்வாடி, சத்துணவு மைய ஊழியர்களுக்கு ஏமாற்றத்தை அளித்துவிட்டது. 42 ஆண்டு பணிபுரிந்து ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு மாதம் ரூ.2,000 பென்ஷன் மட்டுமே தருகின்றனர்.
அடிப்படை பென்ஷன் தொகை ரூ.7,750 வழங்கும் அறிவிப்பை சட்டசபையில் 110 விதியில் அறிவிக்க வேண்டும்.