ADDED : செப் 08, 2024 04:37 AM

காரைக்குடி: காரைக்குடியில் நாட்டு இன மாடுகளை பாதுகாத்திடவும், விழிப்புணர்வை ஏற்படுத்திடவும் நாட்டு இன மஞ்சுவிரட்டு காளை அழகு போட்டி நடந்தது.
காரைக்குடி வைரபுரம் செல்வ விநாயகர் ஆலயத்தில், விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு வைரவபுரம் குடியிருப்போர் நலச்சங்கம் மற்றும் திருவள்ளுவர் நற்பணி மன்றம் சார்பில் நாட்டு இன மஞ்சுவிரட்டு காளை அழகுப் போட்டி நடந்தது.
இதில் சிவகங்கை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், மதுரை, திண்டுக்கல்உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 15-க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன. மாடுகளின் உடல் கட்டமைப்பு, கொம்பு, வால், உள்ளிட்டவற்றை அடிப்படையாகக் கொண்டு மாடுகள் தேர்வு செய்யப்பட்டது.
கமிட்டியாளர்கள் கூறுகையில், நாட்டின மாடுகள் வளர்ப்பை ஊக்குவிக்கும் வகையாக ஜல்லிக்கட்டு மஞ்சுவிரட்டு உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்படுகிறது. நாங்கள் புது முயற்சியாக நாட்டு இன காளைகள் அழகு போட்டி நடத்தி உள்ளோம். இதில் மாடுகளின் கட்டமைப்பு கொம்பு காது வால் உள்ளிட்டவற்றை அடிப்படையாகக் கொண்டு சிறந்த மாடுகளை தேர்வு செய்து பரிசு வழங்குகிறோம்.