ADDED : ஜூன் 25, 2026 08:20 PM
சிங்கம்புணரி, ஜூன் 26-
சிங்கம்புணரியில் முறையாக கட்டப்படாத பாரத் பைபர் கேபிள்களால் விபத்து நடக்கிறது.
இத்தாலுகாவில் சிங்கம்புணரி, எஸ்.புதூர் ஒன்றியங்களில் பி.எஸ்.என்.எல்., நிறுவனத்தின் சார்பில் பாரத் பைபர் கேபிள் இணைப்புத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதன் மூலம் வீடுகள், கடைகள், அரசு அலுவலகங்கள், பள்ளிகளுக்கு பைபர் கேபிள் மூலம் இணையதள வசதி அளிக்கப்படுகிறது.
தனியார் வெண்டர்கள் மூலம் அனைத்து பகுதிகளுக்கும் கேபிள் கொண்டு செல்லப்பட்டுள்ளது. இந்நிலையில் பல இடங்களில் இந்த கேபிள்கள் முறையாக பொருத்தப்படாமல் சாலைகளில் குறுக்கேயும், ஓரங்களிலும் கிடக்கிறது. சிங்கம்புணரி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி அருகே மாணவர்களுக்கு இடையூறாக விபத்தை ஏற்படுத்தும் வகையில் கழுத்து உயரத்தில் இந்த கேபிள்கள் செல்கின்றன. மக்கள் புகார் அளிக்கும் போது மட்டும் மேலோட்டமாக வந்து சரி செய்கின்றனர். மற்ற நேரங்களில் கண்டுகொள்வதில்லை எனவே அனைத்து பகுதிகளில் செல்லும் இவ்வகை கேபிள்களை பாதுகாப்பான முறையில் உயர்த்தி கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
