/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
மக்களுடன் முதல்வர் திட்டம் கண் துடைப்பா: அலுவலகத்தில் குவியும் மக்கள்
/
மக்களுடன் முதல்வர் திட்டம் கண் துடைப்பா: அலுவலகத்தில் குவியும் மக்கள்
மக்களுடன் முதல்வர் திட்டம் கண் துடைப்பா: அலுவலகத்தில் குவியும் மக்கள்
மக்களுடன் முதல்வர் திட்டம் கண் துடைப்பா: அலுவலகத்தில் குவியும் மக்கள்
ADDED : செப் 04, 2024 12:56 AM

திருப்புவனம் : திருப்புவனம் வட்டாரத்தில் நடைபெறும் மக்களுடன் முதல்வர் திட்டத்தில் வழங்கப்படும் மனுக்களுக்கு உரிய தீர்வு கிடைக்காமல் மீண்டும் கிராம மக்கள் தாலுகா அலுவலகத்திற்கே படையெடுத்து வருகின்றனர்.
திருப்புவனம் தாலுகாவில் பூவந்தி, கொந்தகை, பழையனுார் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இக்கிராமங்களைச் சேர்ந்த மக்கள் முதியோர் பென்ஷன், புதிய ரேஷன் கார்டு, வீட்டு மனை பட்டா, மகளிர் உரிமை தொகை உள்ளிட்டவற்றிற்காக மனு கொடுக்கின்றனர். ஆனால் மனு மீது நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்ற தகவலோடு நின்று விடுவதால் மீண்டும் தாலுகா அலுவலகத்திற்கு வந்து மனு கொடுக்க வந்து விடுகின்றனர்.
கிராம மக்கள் அரசு அலுவலகங்களுக்கு அலையக்கூடாது என்பதற்காகத்தான் மக்களுடன் முதல்வர் என அரசு அதிகாரிகளே கிராம மக்களை தேடி வந்து மனு வாங்க இந்த திட்டம் கொண்டு வரப்பட்டது.
பூவந்தியில் ஆகஸ்ட் 20ம் தேதி நடந்த மக்களுடன் முதல்வர் திட்டத்தில் மடப்புரம் ஊராட்சி பகுதி மக்கள் சார்பாக 27 மனுக்கள் வழங்கப்பட்டன. அதில் 17 மனுக்கள் பட்டா மாற்றம் சம்பந்தமாக வழங்கப்பட்டன. ஆனால் இதுவரை பட்டா மாற்றம் சம்பந்தமாக எந்தவித நடவடிக்கையும் இல்லை என்று பாதிக்கப்பட்ட மக்கள் கூறுகின்றனர்.
கலுங்குப்பட்டி சக்திவேல் கூறுகையில் : மடப்புரம் ஊராட்சியைச் சேர்ந்த குறிப்பிட்ட சர்வே எண்ணில் பட்டா கேட்டு மனு கொடுத்தோம், ஆனால் அந்த இடத்தில் ஊராட்சி நிர்வாகம் மண்சாலை அமைத்துள்ளது. நில அளவையர் அலுவலகத்தில் அதிகாரிகளே இருப்பதில்லை. தினசரி பட்டா கேட்டு அலைச்சலுக்கு ஆளாகின்றோம், என்றார்.
நில அளவையர் கண்ணன் கூறுகையில்: மனுக்கள் வழங்கியவர்கள் பயனாளிகள் தானா என்பதை அறியவே அலுவலகத்திற்கு வரவழைத்தோம். மனு கொடுத்த 30 நாட்களுக்குள் தீர்வு காண வேண்டும் என்பது தான் விதி, பூவந்தியில் மனு கொடுத்து 10 நாட்கள் தான் ஆகிறது. விரைவில் மனுக்களுக்கு தீர்வு காணப்படும். தினசரி அலுவலகத்தில் தான் உள்ளோம், என்றார்.