/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
சிவகங்கை நகராட்சியில் அதிகாரிகளுக்குள் மோதல்
/
சிவகங்கை நகராட்சியில் அதிகாரிகளுக்குள் மோதல்
ADDED : ஆக 09, 2024 02:06 AM
சிவகங்கை:சிவகங்கை நகராட்சியில் அதிகாரிகளுக்குள் மோதல் நிலவுவதால், சுகாதார அலுவலர் விருப்ப ஓய்வு கடிதம் கொடுத்துவிட்டு விடுமுறையில் சென்றுவிட்டார்.
சிவகங்கை நகராட்சி சுகாதார அலுவலர் சீனிவாசன், 51. சிதம்பரத்தில் பணிபுரிந்தார். ஆறு மாதங்களுக்கு முன்பு பணி மாறுதலில் சிவகங்கை வந்தார்.
இந்நிலையில் வாட்ஸாப்பில் அவர், ''நான் கால்வீக்கம், வயிறு வீக்கத்தால் அவதிப்படுகிறேன். நான் பணியேற்ற ஆறு மாதங்களில் 2 கோடிக்கு பில் பாஸ் செய்துள்ளேன். ஒரு பைசா கூட லஞ்சம் வாங்கவில்லை.
''சர்ஜரி செய்ய வேண்டிய நிலையில் என் உடல்நிலை உள்ளது. விருப்ப ஓய்வு கிடைக்கும் வரை பணிக்கு வர இயலாத நிலையில் உள்ளேன்'' எனவும் அதிகாரிகள் மீதும் சில குற்றச்சாட்டுகளை குறிப்பிட்டுள்ளார்.
இந்த பதிவு சிவகங்கை முழுதும் வாட்ஸாப்பில் பரவி வருகிறது.
இதுகுறித்து அவரிடம் கேட்டபோது, அவர் கூறியதாவது:
ஏற்கனவே சிவகங்கை நகராட்சி மீது விஜிலென்சில் புகார் உள்ளது. முறைகேடுகளுக்கு நான் உடந்தையாக இருக்க முடியாது. சில அதிகாரிகள் அனைத்து பில்லிற்கும் கமிஷன் வாங்குகின்றனர். சுகாதார துறையின் வாகனம், மேலாளர் கட்டுப்பாட்டில் உள்ளது.
துாய்மை பணியாளர்களுக்கு சம்பள நிலுவை உள்ளது. ஒரு குப்பை வண்டி மதுரைக்கு பழுதுநீக்க சென்று ஒரு வருடமாகிறது. அதை சரி செய்து எடுத்து வரவில்லை.
இப்படி பல பிரச்னைகள். நான் விருப்ப ஓய்வு கொடுத்து இரண்டு மாதம் பணிபுரிந்தேன். ஆனாலும் பணி மேலாளர் டார்ச்சர் செய்வதால் விடுமுறை எடுத்துள்ளேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
மேலாளர் கென்னடி கூறுகையில், ''அவர் மீது குற்றச்சாட்டு உள்ளது. அவருக்கும் எனக்கும் சம்பந்தமே இல்லை. எதுவாக இருந்தாலும் அவர் கமிஷனரிடம் தான் தெரிவிக்க வேண்டும்,'' என்றார்.
கமிஷனர் கிருஷ்ணாராம் கூறுகையில், ''இது பற்றி எந்த புகாரும் வரவில்லை. எனக்கு எதுவும் தெரியாது,'' என்றார்.