/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
வைக்கோல் தட்டுப்பாட்டை சமாளிக்க தக்கை பூண்டு
/
வைக்கோல் தட்டுப்பாட்டை சமாளிக்க தக்கை பூண்டு
ADDED : மே 11, 2024 11:15 PM

சிங்கம்புணரி:சிங்கம்புணரி பகுதியில் கோடையில் வைக்கோல் தட்டுப்பாட்டை சமாளிக்க விவசாயிகள் தக்கை பூண்டு வளர்த்து வருகின்றனர்.
கடந்த ஆண்டு பருவம் தவறி பெய்த மழை காரணமாக விவசாயம் பொய்த்தும் பயிர்கள் சேதம் அடைந்தும் விவசாயிகள் கடும் நஷ்டத்திற்கு ஆளாகினர்.
பல இடங்களில் கால்நடைகளுக்கு வைக்கோல் கூட மிஞ்சவில்லை. இந்நிலையில் தற்போது கோடை வெயிலின் தாக்கம் வாட்டி வரும் நிலையில் வைக்கோல் தட்டுப்பாட்டை சமாளிக்க விவசாயிகள் பலர் தக்கை பூண்டுகளை வளர்த்து வருகின்றனர்.
விவசாயிகள் கூறியதாவது: கடந்த அறுவடைக்கு பின்னர் நிலத்தில் தக்கை பூண்டு செடி விதைகளை தூவினோம். குறைந்த தண்ணீரில் மூன்று வாரத்திற்குள் இச்செடி 5 அடி வரை வளர்ந்து நிலத்தை காடு போல் மாற்றி விடுகிறது.
இதனால் வெப்பம் காரணமாக மண்ணின் உள்ள ஈரப்பதம் ஆவியாகாமல் தடுக்கப்படுகிறது. இது அருகே உள்ள தென்னை மரங்களுக்கு தேவையான நீர்ச்சத்து தொடர்ந்து கிடைக்க உதவுகிறது. மேலும் இச்செடிகள் ஆடு, மாடுகளுக்கு தீவனமாகவும் கொடுக்கிறோம்.
கோடைகாலத்தில் இச்செடிகள் வைக்கோல் தட்டுப்பாட்டை போக்கும் முக்கிய ஆதாரமாக உள்ளது. ஒரு மாதத்திற்கு பிறகு செடியை அப்படியே உழுது மண்ணிற்கு அடி உரமாகவும் மாற்றிவிடலாம். பிறகு எந்த பயிரை பயிரிட்டாலும் விவசாயம் திருப்தியாக இருக்கும், மண்வளமும் செழிக்கும் என்றனர்.