/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
டிராக்டரில் ஆபத்தான பயணம்: அத்துமீறும் விவசாயிகள்
/
டிராக்டரில் ஆபத்தான பயணம்: அத்துமீறும் விவசாயிகள்
ADDED : மே 31, 2024 06:22 AM

திருப்புவனம் : திருப்புவனம் வட்டாரத்தில் தொடர்ந்து டிராக்டரில் ஆபத்தான முறையில் பயணம் செய்வதால் உயிரிழப்பு ஏற்படும் அபாயம் உள்ளது.
திருப்புவனத்தைச் சுற்றியுள்ள அல்லிநகரம், தட்டான்குளம், பூவந்தி, திருப்பாச்சேத்தி உள்ளிட்ட பகுதிகளில் நெல், வாழை, கரும்பு,தென்னை, வெற்றிலை உள்ளிட்ட விவசாயம் நடைபெறுகிறது.
விவசாய பணிகளுக்கு கூலி வேலைகளுக்கு போதிய ஆட்கள் கிடைக்காததால் இயந்திரங்களை நம்பியே உள்ளனர். இதனால் வெளி மாவட்டங்களில் இருந்து கூலி தொழிலாளர்கள் பலரும் குடும்பம் குடும்பமாக வந்து தங்கியிருந்து விவசாய கூலி வேலை செய்து வருகின்றனர்.
விவசாய பணிகளுக்கு சென்று வர பெரும்பாலும் கூலி தொழிலாளர்கள், டிராக்டர்களையே பயன்படுத்துகின்றனர். அதிலும்விதிகளை மீறி ஒரு டிராக்டர் இன்ஜினில் 10க்கும் மேற்பட்டோர் பயணம் செய்கின்றனர்.
வயல்களின் நடுவே உள்ள மேடு பள்ளங்களில் டிராக்டர்கள் தடுமாறி தடுமாறி செல்லும் போது வண்டியில் அமர்ந்திருப்பவர்கள் கீழே விழுந்து உயிரிழக்க நேரிடுகிறது.
பூவந்தி அருகே லட்சுமிபுரத்தில் கடந்த சில தினங்களுக்கு முன் டிராக்டரில் கூலி வேலைக்கு கணவன்,மனைவி மற்றும் குழந்தையுடன் செல்லும் போது டிராக்டர் கவிழ்ந்து மனைவி மட்டும் உயிர்இழந்தது குறிப்பிடத்தக்கது. அதுபோல பலரும் டிராக்டரில் விதிகளை மீறி பயணம் செய்கின்றனர்.
நேற்று காலை கலியாந்துார் அருகே மூன்று சிறுவர்களை டிராக்டர் இன்ஜின் பின்புறம் உழவு கருவி மேல் நிற்க வைத்து விவசாயி ஒருவர் ஓட்டி சென்றது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதுபோல டிராக்டர் டிரைலரிலும் திருமணம், கோயில் விழா, இறப்பு உள்ளிட்டவற்றிற்கும் ஆட்களை அளவுக்கு அதிகமாக ஏற்றி செல்வதும் தொடர்கதையாக உள்ளது.
போக்குவரத்து போலீசார் விவசாயிகள் என்பதால் கண்டு கொள்வதில்லை. இதனை சாதகமாக பயன்படுத்தி விவசாயிகள் பலரும் விதி மீறி செயல்படுகின்றனர்.