ADDED : மார் 22, 2024 04:54 AM
சிங்கம்புணரி: இந்த முறையும் சிவகங்கை தொகுதி காங்., க்கு ஒதுக்கப்பட்டதால் சிவகங்கை மாவட்டத்தில் தி.மு.க., கட்சி அலுவலகங்கள் வெறிச்சோடி காணப்படுகிறது.
ஒவ்வொரு லோக்சபா தேர்தலின் போதும் சிவகங்கை தொகுதியை தி.மு.க., அதன் கூட்டணி கட்சிக்கு தொடர்ந்து ஒதுக்கி வருகிறது. குறிப்பாக ப.சிதம்பரம், அவரது மகன் கார்த்தி தொடர்ந்து போட்டியிட்டு வருகின்றனர்.
சட்டமன்ற தேர்தலின் போது உற்சாகமாக களமிறங்கும் தி.மு.க., தொண்டர்கள் லோக்சபா தேர்தல் வந்துவிட்டால் ஏமாற்றம், மன உளைச்சலுக்கு ஆளாகி சோர்ந்து விடுகின்றனர்.
சிவகங்கை தொகுதியை ப.சிதம்பரம் குடும்பத்திற்கு கொடுத்தது போல் தொடர்ந்து ஒதுக்குவதால் எம்.பி., வேட்பாளர் கனவில் வந்து செல்லும் உடன்பிறப்பு ஒவ்வொரு முறையும் முயற்சித்து ஏமாந்து போகின்றனர்.
அதோடு கூட்டணி கட்சி என்பதால் தி.மு.க., வினருக்கு தேர்தல் பணிகளின் போது உரிய மரியாதை செய்யப்படுவது இல்லை என்ற ஆதங்கம் உள்ளது.
இதனால் லோக்சபா தேர்தல் என்று வந்துவிட்டாலே சிவகங்கை தொகுதியில் தி.மு.க., தொண்டர்கள் சோர்வடைந்து விடுகின்றனர். தற்போது தேர்தல் அறிவித்து நாட்களாகியும் சிங்கம்புணரி தி.மு.க., அலுவலகமான அண்ணாதுரை மன்றம் வெறிச்சோடி கிடக்கிறது.
வழக்கமாக கட்சியினரின் பிறந்தநாள் கொண்டாட்டம், ஆலோசனைக் கூட்டம் என இம்மன்றம் களைகட்டும். ஆனால் தேர்தல் அறிவித்த பிறகு நிர்வாகிகள் மண்டபத்திற்கு வருவதில்லை.
தொகுதியை கூட்டணிக்கு கொடுத்து விட்டதால் எதிர்பார்ப்புடன் வரும் தொண்டர்களுக்கு செலவு செய்வது ஒரு பிரச்னையாக உள்ளது.
வேட்பாளர் அறிவிக்கப்பட்டு கட்சியினருக்கு உரிய மரியாதை செய்தால் மட்டுமே அலுவலகம் களைகட்ட தொடங்கும் என்கிறார்கள் அடிமட்ட தொண்டர்கள்.

