/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
மாடுகளின் நடவடிக்கைகளை கண்டறிய '‛டிவைஸ்'
/
மாடுகளின் நடவடிக்கைகளை கண்டறிய '‛டிவைஸ்'
ADDED : ஜூன் 13, 2024 05:58 AM

காரைக்குடி: மாடுகளின் அன்றாட நடவடிக்கைகளை கண்டறிய சேட்டிலைட் மூலம் இயங்கும் புதிய கருவியை, மாடுகளின் காதுகளில் பொருத்தி காரைக்குடியில் நடந்த பயிற்சி முகாமில் விஞ்ஞானிகள் விளக்கம் அளித்தனர்.
சிவகங்கை மாவட்டம் குன்றக்குடி வேளாண் அறிவியல் நிலையத்தில் கால்நடை பசுமை மேலாண்மை ஊக்குவிப்பாளர்கள் என்ற தலைப்பில் கால்நடை மருந்தக உதவியாளர்களுக்கு பயிற்சி நடந்தது.
டெல்லி இந்திய வேளாண் திறன் கவுன்சில், இந்திய தேசிய திறன் அறக்கட்டளை மற்றும் ஆஸ்திரேலியா அடிலெய்டு பல்கலை., வேளாண் மற்றும் தோட்டக்கலை கல்லுாரி சார்பில் பயிற்சி நடந்தது. சிவகங்கை மாவட்ட மண்டல இணை இயக்குனர் ராமச்சந்திரன் தலைமையேற்றார்.
இதில் ஆஸ்திரேலியா விவசாய மற்றும் தோட்டக்கலை கல்லுாரி முதன்மை விஞ்ஞானி அல்வின் கோபால், விவசாய பயிற்சியாளர் ரியான் வால்டர், குன்றக்குடி வேளாண் நிலைய தலைவர் செந்துார்குமரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
குன்றக்குடி வேளாண் அறிவியல் நிலைய தலைவர் செந்துார்குமரன் கூறுகையில்:
மாடுகளின் சாணத்திலிருந்து வெளியேறும் மீத்தேன் சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்க கூடியவை.
இதனை தடுப்பதற்கு மாடுகளுக்கு சரி விகித தீவனம் வழங்க வேண்டும். அவ்வாறு கொடுக்காத பட்சத்தில் மாடுகளின் வயிற்றில் அசிட்டோசிட் என்ற அமிலம் உருவாகி சாணத்துடன் மீத்தேன் வாயு வரக்கூடிய அபாயம் நிலவும். மாடுகளுக்கு பசுந்தீவனம், உலர் தீவனம், அடர் தீவனம் உள்ளிட்ட தீவனங்களை முறையாக வழங்க வேண்டும்.
இதனை தடுக்க கால்நடை மருந்தக உதவியாளர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.
இந்த பயிற்சியில் கலந்து கொண்ட ஆஸ்திரேலிய விஞ்ஞானிகள் மாடுகளின் நடவடிக்கைகளை கண்காணிக்க புதிய கருவியை அறிமுகம் செய்துள்ளனர். அதில் மாடுகளின் தீவன அளவு, மாடுகள் நடக்கும் துாரம், மாடுகள் இருக்கும் இடம் என அனைத்தையும் நேரடியாக சேட்டிலைட் மூலம் கண்டறிய முடியும்.
இந்தக் கருவியை ஆஸ்திரேலிய விஞ்ஞானிகள், மாடுகளின் காதுகளில் பொருத்தி செயல்முறைப்படுத்தி காண்பித்தனர். இந்தக் கருவிக்கு சிம் கார்டு, சார்ஜ் போட தேவையில்லை.
சூரிய ஒளி மூலம் அதுவே சார்ஜ் செய்து கொள்ளும். இதன் மூலம் மாடுகளின் தீவனம் கண்காணிக்கப்படுவதோடு, சாணத்திலிருந்து வெளியேறும் மீத்தேன் அளவையும் குறைக்க முடியும் என்றார்.