/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
போலீஸ் குடியிருப்பில் விஷபூச்சிகள்
/
போலீஸ் குடியிருப்பில் விஷபூச்சிகள்
ADDED : ஜூலை 01, 2024 05:47 AM
சிவகங்கை : சிவகங்கையில் போலீசாருக்காக உங்கள் சொந்த இல்லம் திட்டத்தில் கட்டப்பட்ட வீடுகளின் சுற்றுச்சுவர் இல்லாததால் ஆடு, மாடுகள் மற்றும் விஷ பூச்சிகளின் தொல்லை இருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.
சிவகங்கையில், காவலர் வீட்டு வசதிக்கழகம் சார்பில் உங்கள் சொந்தம் இல்லம் திட்டத்தில் ரூ.44 கோடியில் வீடுகள் கட்டப்பட்டன. இன்ஸ்பெக்டர், எஸ்.ஐ.,க்களுக்கு 17 வீடுகள், போலீசாருக்கு 123 வீடுகள் என 140 வீடுகள் கட்டப்பட்டுள்ளன.
இன்ஸ்பெக்டர், எஸ்.ஐ.க்களுக்கு 1,292 சதுர அடி மனையிடமும், அதில் 850 சதுர அடியில் 2 படுக்கை அறை கொண்ட வீடும் கட்டப்பட்டுள்ளது.
இந்த வீட்டின் விலை ரூ.26 லட்சம். அதேபோல் போலீசாருக்கு 1,162 சதுர அடி மனையிடமும், அதில் 655 சதுர அடியில் 2 படுக்கை அறை கொண்ட வீடும் கட்டப்பட்டுள்ளது.
இதற்கு ரூ.20 லட்சம் விலை. வீடுகள் கட்டும் பணி 2019ம் ஆண்டு பிப்ரவரியில் தொடங்கியது.
கொரோனா காலத்தால் பணியில் தாமதம் ஏற்பட்டு 2022ல் கட்டுமான பணி முடிந்தது. வீடு கட்டுமான பணி முடிந்த நிலையில் போலீசார் சிலர் இந்த வீடுகளை வாங்கி குடியேறி வருகின்றனர்.
தற்போது வரை 70 குடும்பங்கள் வசிக்கின்றனர். இந்நிலையில் குடியிருப்பை சுற்றிலும் சுற்றுச்சுவர் இல்லை. முட்செடிகள் முளைத்து காடுபோல்காட்சி அளிக்கிறது. இப்பகுதியில் தெருவிளக்குகள் எரிவதேயில்லை. இரவில் விஷபூச்சிகளின் அச்சம் நிலவுகிறது. மாவட்ட நிர்வாகம் குடியிருப்பை சுற்றி சுற்றுச்சுவர் கட்டித்தர வேண்டும் என போலீசார் வேண்டுகோள் விடுகின்றனர்.