ADDED : மார் 07, 2025 07:59 AM

இளையான்குடி: இளையான்குடி அருகே பெரும்பாலை அரசு துவக்கப் பள்ளியில் கழிப்பறை சேதமடைந்துள்ளதால் மாணவர்கள் வீடுகளுக்கும் அருகே உள்ள கண்மாய்க்கும் செல்வதால் பெற்றோர்கள் அச்சத்தில் உள்ளனர்.
இளையான்குடி ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட நகரகுடி ஊராட்சியில் பெரும்பாலை கிராமத்தில் உள்ள அரசு துவக்கப் பள்ளியில் 25க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர்.இரண்டு ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர். இப்பள்ளியில் உள்ள கழிப்பறை சேதமடைந்து தண்ணீர் வசதி இல்லாததாலும் மாணவர்கள் பயன்படுத்த முடியாமல் அருகே உள்ள வீடுகளுக்கும், கண்மாய் பகுதிகளுக்கும் சென்று வருகின்றனர்.
குடிதண்ணீர் தொட்டியும் சுத்தம் இல்லாமல் உள்ளது. பள்ளியை சுற்றி சுற்றுச்சுவர் இல்லாததால் கால்நடைகள் மற்றும் நாய்கள் பள்ளி வளாகத்தில் வலம் வருகின்றன. மாவட்ட நிர்வாகம் மாணவர்களின் நலன் கருதி இப்பள்ளிக்கு தேவையான அடிப்படை வசதிகளை உடனடியாக செய்து கொடுக்க வேண்டும் என பெற்றோர்கள் எதிர்பார்க்கின்றனர்.